தெலுங்கானா கவுரவக் கொலை வழக்கில் பீகார் கூலிப்படைத் தலைவன் உள்பட 7 பேர் கைது

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள மிர்யலாகுடா பகுதியைச் சேர்ந்த பிரணய்குமார்(வயது 22), தனது காதலி அம்ருதாவை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார்.
தெலுங்கானா கவுரவக் கொலை வழக்கில் பீகார் கூலிப்படைத் தலைவன் உள்பட 7 பேர் கைது
Published on

ஐதராபாத்,

பிரணய்குமார், அம்ருதா இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அம்ருதாவின் தந்தையும், தொழில் அதிபருமான மாருதி ராவ் இந்த திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மிர்யலாகுடாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு மனைவியை கர்ப்ப பரிசோதனைக்காக பிரணய்குமார் அழைத்துச்சென்றுவிட்டு வெளியே வந்தார். அப்போது, அம்ருதாவின் கண் முன்பாகவே அவருடைய கணவரை ஒரு மர்ம நபர் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொன்றார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அம்ருதாவின் தந்தை மாருதிராவ் கூலிப்படையை ஏவி பிரணய்குமாரை கவுரவக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரையும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய உறவினர் பிராவனையும் சம்பவத்தன்றே கைது செய்தனர்.

இந்தநிலையில் பிரணய்குமாரை கத்தியால் வெட்டிக்கொன்ற கூலிப்படைத் தலைவனும், பீகாரைச் சேர்ந்தவனுமான சுபாஷ் சர்மா உள்பட 7 பேரை தெலுங்கானா போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com