தெலுங்கானா: சொந்த செலவில் கட்டிய கல்லறையில் முதியவர் அடக்கம்

கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் கட்டினார். பல நல்ல காரியங்களை செய்துள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் லட்சுமிபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் நக்கா இந்திரய்யா (வயது 80). மற்ற பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து, வைத்து விட்டு போவது போன்று இல்லாமல் வித்தியாசத்துடன் செயல்பட்டு உள்ளார்.
இறுதி காலத்தில், அவருடைய குழந்தைகள் எந்த சுமையையும் எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக, பல ஆண்டுகளுக்கு முன்பே, அவர் வாழ்ந்த காலத்திலேயே தன்னுடைய சொந்த செலவில் கல்லறை கட்டினார். அவருடைய மனைவியின் கல்லறைக்கு அருகில் அது அமைந்தது.
அவர் வாழ்ந்த காலத்தில், அந்த இடத்திற்கு செல்வது, சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது மற்றும் அமைதியான சிந்தனையில் அமர்ந்திருப்பது போன்றவற்றை மேற்கொண்டார்.
இதுபற்றி அவரது மூத்த சகோதரர் நக்கா பூமையா கூறும்போது, இந்திரய்யா கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் கட்டினார். கிராமத்திற்கு பல நல்ல காரியங்களை செய்துள்ளார். அவர் சொத்துகளை தனது 4 குழந்தைகளுக்கும் பிரித்து வழங்கினார். அவர்களுக்காக வீடுகளை கட்டினார். குடும்பத்தில் 9 திருமணங்களையும் செய்து வைத்துள்ளார்.
கிராமவாசி ஸ்ரீனிவாஸ் என்பவர் கூறும்போது, இந்திரய்யா என்னிடம், நீங்கள் சேமித்து வைத்த செல்வம் உங்களை விட்டு ஒரு நாள் சென்று விடும். ஆனால் நீங்கள் மற்றவர்களுக்காக கொடுப்பது என்றென்றும் உங்களுடனேயே இருக்கும் என கூறுவார் என்று கூறினார்.
இந்நிலையில், நல்ல உடல்நலத்துடன் இருந்தபோதே அவர் நேற்று மரணமடைந்து விட்டார். அவரது விருப்பத்தின்படியே, அவர் அமைத்த கல்லறையிலேயே அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால், அவரது இறுதி ஆசை நிறைவேறி உள்ளது.






