

ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் வெமுலவாடா தொகுதி தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ. சி.ரமேஷ். இவர் முன்பு தெலுங்குதேசம் கட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
அதில் இருந்து விலகி டி.ஆர்.எஸ்.கட்சியில் சேர்ந்து 2010ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆதிநிவாஸ் ஐதராபாத் ஐகோர்ட்டில், ரமேஷ் ஜெர்மன் குடியுரிமை பெற்றவர், போலி ஆவணங்கள் மூலம் இந்திய குடியுரிமை பெற்றிருப்பதால் அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரமேஷ் வெற்றி செல்லாது என கோர்ட்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ரமேஷ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை பெற்றார். 2014தேர்தலில் ரமேஷ் மீண்டும் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார். சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி ஆதிநிவாஸ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில், ரமேஷுக்கு ஜெர்மன் குடியுரிமை இருப்பது உண்மை தான். போலி ஆவணங்கள் மூலம் அவர் இந்திய குடியுரிமை பெற்றிருப்பதாகவும், அதனை ரத்துசெய்வதாகவும் கூறியிருந்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்னும் தீர்ப்பு அளிக்கவில்லை. ஆனாலும் மத்திய அரசின் பதிலை கோர்ட்டு ஏற்றுக்கொண்டால் ரமேஷின் வெற்றி செல்லாது என்று கூறப்படுகிறது.