டிஆர்எஸ் கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சி: 3 பேர் கைது - தெலுங்கானாவில் பரபரப்பு!

டிஆர்எஸ் கட்சியின் நான்கு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதற்கு குதிரை பேர முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
டிஆர்எஸ் கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சி: 3 பேர் கைது - தெலுங்கானாவில் பரபரப்பு!
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா ராஷ்டிர சமிதி(டி ஆர் எஸ்) கட்சியின் நான்கு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதற்கு குதிரை பேர முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேர் பண்ணை வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

எம்.எல்.ஏ.க்கள் சிலர் போலீசாருக்கு போன் செய்து, "கட்சி மாறுவதற்கு தங்களுக்கு லஞ்சம் கொடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள். கட்சி மாறுவதற்கு பெரும் பணம், ஒப்பந்தங்கள் மற்றும் பதவிகள் வழங்க உறுதியளிப்பதாக அவர்கள் கூறினார்கள்" என்று புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து அஜீஸ் நகரில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் நேற்று மாலை சோதனை நடத்தினர்.

பண்ணை வீட்டில் ரகசிய பேரம் குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்த நிலையில், ரூ.100 கோடி அல்லது அதற்கு அதிகமான தொகைக்கு ஒப்பந்தங்கள் நடைபெற்றிருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் எம்எல்ஏக்களை கட்சி மாற்ற, முக்கிய நபருக்கு ரூ.100 கோடியும், ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரூ.50 கோடியும் தருவதாக கைதானவர்கள் அசைவார்த்தை கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் போலி அடையாளங்கள் மூலம் ஐதராபாத்திற்கு வந்தவர்கள் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அரியானாவின் பரிதாபாத்தைச் சேர்ந்த சாமியார் ராம் சந்திர பாரதி என்ற சதீஷ் சர்மா, திருப்பதியைச் சேர்ந்த சாமியார் சிம்ஹயாஜி மற்றும் தொழிலதிபர் நந்தகுமார் என அடையாளம் காணப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தந்தூர் எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டியின் பண்ணை வீட்டில்தான் இந்த குதிரை பேர முயற்சி நடந்துள்ளது. அதன்பின்னர் சம்மந்தப்பட்ட 4 எம்எல்ஏக்களும் முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லமான பிரகதி பவனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கைதானவர்கள் எந்த கட்சிக்காக இத்தகைய செயலில் ஈடுபட்டனர் என்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. எனினும், தெலுங்கானாவில் "ஆபரேஷன் லோட்டஸ்" மூலம் டிஆர்எஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதனை மறுத்துள்ள பாஜக தரப்பு, முனுகோட் தொகுதி இடைத்தேர்தலில் கவனத்தை திசை திருப்பவே முதல்-மந்திரி சந்திரசேகர் ராவும் அவரது கட்சியினரும் குதிரை பேர நாடகத்தை நடத்தியுள்ளனர் என்று கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com