தெலங்கானா: மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து 4 பெண்கள் பலி; 20 பேர் காயம்

விபத்து சத்தம் கேட்டு ஓடிவந்த உள்ளூர் மக்களும், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
தெலங்கானா: மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து 4 பெண்கள் பலி; 20 பேர் காயம்
விபத்து
Published on: 

ஐதராபாத்,

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த பயங்கர பேருந்து விபத்தில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இறுதிச் சடங்கிற்கு சென்றபோது நேர்ந்த சோகம்

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தின் கேசரம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 54 பயணிகள், தாருர் மண்டலம் சிந்தகுண்டா கிராமத்தில் நடைபெறவிருந்த இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக தனியார் பேருந்து ஒன்றில் புறப்பட்டுள்ளனர்.

பிரேக் செயலிழந்ததே விபத்துக்குக் காரணம்

பேருந்து விகாராபாத் அருகே உள்ள அனந்தகிரி மலைப்பாதையின் வளைவான சரிவில் இறங்கியது. அப்போது, திடீரென பிரேக் செயலிழந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அசுர வேகத்தில் சென்ற பேருந்து, பாதையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உடனடி மீட்புப்பணியில் உள்ளூர் மக்கள்

விபத்து சத்தம் கேட்டு ஓடிவந்த உள்ளூர் மக்களும், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்டு, விகாராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த விகாரபாத் எஸ்பி சினேகா மெஹ்ரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை தொடங்கினர்.

4 பெண்கள் பலி; 7 பேர் நிலைமை கவலைக்கிடம்

இந்த விபத்தில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் அடையாளங்களைச் சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. காயமடைந்த 20 பேரில் 7 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இரங்கல்

இச்சம்பவத்திற்கு தெலங்கானா முதல்-மந்திரி ஏ.ரேவந்த் ரெட்டி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி உயர்தர சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com