தெலுங்கானா ஆலையில் வெடி விபத்து; ரூ.1 கோடி இழப்பீடுக்கு முதல்-மந்திரி உறுதி

அரசு தரப்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தெலுங்கானா ஆலையில் வெடி விபத்து; ரூ.1 கோடி இழப்பீடுக்கு முதல்-மந்திரி உறுதி
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த 10 பேர் உயிரிழந்தனர் என நேற்று தகவல் வெளியானது.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது.

படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சம்பவ பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆலை நிர்வாகத்திடம் பேசி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு பெற்று தர உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்.

ரூ.1 கோடி வழங்குவதற்காக அரசு மற்றும் நிறுவனம் தரப்பில் உத்தரவுகளை பிறப்பித்து உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். தீவிர காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து பணிக்கு திரும்ப கூடிய அளவுக்கு காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதேபோன்று அரசு தரப்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சம்பவத்தின்போது 143 பேர் இருந்தனர். 56 பேர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர். இதனால், மீதமுள்ளவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களில் பலர் ஒடிசா, பீகார், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com