தெலுங்கானாவில் 48,000 போக்குவரத்து ஊழியர்கள் நீக்கம் - நீதிமன்றத்தை நாட உள்ளதாக ஊழியர்கள் தகவல்

தெலுங்கானாவில் 48,000 போக்குவரத்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக, நீதிமன்றத்தை நாட உள்ளதாக ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவில் 48,000 போக்குவரத்து ஊழியர்கள் நீக்கம் - நீதிமன்றத்தை நாட உள்ளதாக ஊழியர்கள் தகவல்
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அதன் தொழிலாளர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தற்காலிக ஊழியர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும், பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாததால், பண்டிகை காலத்தில் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று தெலுங்கானா அரசு சனிக்கிழமை மாலை 6 மணி வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தது.

ஆனால், போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்பாததால், கடும் அதிருப்தி அடைந்த முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், விழாக் காலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம். ஏற்கனவே போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்கி வரும் நிலையில் மேலும் கடன் சுமை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் 48 ஆயிரம் ஊழியர்களையும் டிஸ்மிஸ் செய்வதாக உத்தரவிட்டதுடன், பணி நீக்கம் செய்த ஊழியர்களோடு எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இனி இடமில்லை என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து சந்திரசேகர ராவ் மேலும் கூறுகையில், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் எந்த ஒழுக்கமற்ற செயல்களுக்கும், மிரட்டலுக்கும் அரசு கட்டுப்படாது. மீண்டும் பணியாளர்களை நியமிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், புதிதாக அரசு வேலையில் சேர்பவர்கள், எந்தவித தொழிற்சங்கத்திலும் இணைய மாட்டோம் என்று உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் 48,000 போக்குவரத்து ஊழியர்களை நீக்கிய உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம் என ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெலுங்கானா சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மேலும் தெரிவிக்கையில், புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற முதல்-மந்திரியின் கருத்து அகந்தையின் வெளிப்பாடு. ஒட்டுமொத்தமாக இத்தனை ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதுவரை நாங்கள் ஆர்.டி.சி.யின் பாதுகாப்புக்காகப் போராடி வந்தோம். ஆனால், தற்போது ஜனநாயகத்தைப் பாதுகாக்க போராட வேண்டிய தேவை உள்ளது. ஆர்.டி.சி.யைப் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், பொதுப் பயன்பாடுகளை அரசு தனியார்மயமாக்க முயற்சிக்கிறது. அரசின் இந்த முயற்சிகளை ஊழியர்களும், மக்களும் எதிர்ப்பார்கள் என சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com