தெலுங்கானா; 2-ம் வகுப்பு மாணவர்களின் கண்களிலும், காதுகளிலும் மிளகாய் பொடியை தூவிய ஆசிரியர்

பெற்றோர் மற்றும் கிராமத்தினர், இந்த விவகாரம் பற்றி முழுமையாக விசாரிக்கும்படி கல்வி அதிகாரியிடமும் முறைப்படி புகார் அளித்தனர்.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் நந்திப்பேட்டை நகரில் குதவன்பூர் என்ற கிராமத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில், 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் சங்கர் என்பவர் பாடம் நடத்தி வருகிறார். அப்போது, மாணவர்கள் சிலர் ஒழுங்கீனத்துடன் நடந்து கொண்டனர் என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் சங்கர், அந்த மாணவர்களின் கண்களிலும், காதுகளிலும் மிளகாய் பொடியை தூவியுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் கதறி அழுதனர்.
அவர்கள் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் கூறி முறையிட்டனர். இதனால் மாணவர்களின் பெற்றோர், சங்கரிடம் வந்து நியாயம் கேட்டுள்ளனர். அப்போது, அவர்களையும் அவர் திட்டியிருக்கிறார் என கூறப்படுகிறது. இதனையடுத்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
அந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராமத்தினர், இந்த விவகாரம் பற்றி முழுமையாக விசாரிக்கும்படி கல்வி அதிகாரியிடமும் முறைப்படி புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் பள்ளிக்கு வந்தபோது, ஆசிரியர் சங்கர் தலைமறைவானார். அவரை தேடி வருகிறார்கள். பள்ளியில் இருந்த ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து விட்டு சென்றனர்.
இதனால், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், மாணவர்களுககு பாடம் கற்று கொடுக்கும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டு உள்ளது.






