தெலுங்கானா: மாணவிகள் விடுதிக்குள் புகுந்து திருடிய நபருக்கு நேர்ந்த கதி...

தெலுங்கானாவில் கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் புகுந்து லேப்டாப், மொபைல் போன்களை திருடிய நபருக்கு மறக்க முடியாத அனுபவம் ஏற்பட்டு உள்ளது.
தெலுங்கானா: மாணவிகள் விடுதிக்குள் புகுந்து திருடிய நபருக்கு நேர்ந்த கதி...
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஹனம்கொண்டா மாவட்டத்தில் அனந்தசாகர் பகுதியில் எஸ்.ஆர். பொறியியல் கல்லூரிக்கான மாணவிகள் விடுதி ஒன்று அமைந்து உள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு நபர் ஒருவர் விடுதிக்குள் புகுந்து மாணவிகளின் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை திருடியுள்ளார்.

இதன்பின்னர் விடுதியில் இருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி வெளியே வந்துள்ளார். அந்த இரவில் தப்பியோடிய அவர் அவசரத்தில், தவறி கிணறு ஒன்றில் விழுந்து விட்டார்.

அந்த கிணறு அதிக ஆழம் கொண்டிருந்தது. அவரால் மேலே ஏறி வெளியே வரவும் முடியவில்லை. இதனால், என்ன செய்வதென தெரியாமல் இரவு முழுவதும் கிணற்றுக்குள்ளேயே பொழுதுபோக்கி கொண்டு இருந்துள்ளார்.

அடுத்த நாள் காலையில் விடிந்ததும், அந்த வழியே மக்கள் நடந்து செல்லும் சத்தம் கேட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கிணற்றுக்குள் இருந்தபடி உதவி கேட்டு அந்த நபர் கூச்சலிட்டு உள்ளார். அவரை பார்த்த உள்ளூர்வாசிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பின்னர், கயிறு கட்டி அவரை வெளியே கொண்டு வந்தனர். விடுதியில் இருந்து 4 லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை திருடிய விவரங்களை அவர் போலீசில் ஒப்பு கொண்டார்.

ஆனால், இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி விட்டு செய்தியாளர்களிடம் கூறும்போது, 3 நாட்களில் இந்த நபர் 14 செல் போன்கள் மற்றும் 6 லேப்டாப்புகளை திருடியுள்ளார் என்ற விவரங்களை கூறியுள்ளனர். இதனால் மிரண்டு போயிருந்த, அந்த நபரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

கல்லூரி மாணவிகள் கூறும்போது, திருட்டு சம்பவங்கள் பற்றி நிர்வாகத்திடம் பலமுறை கூறியபோதும், தேவையான நடவடிக்கை எடுக்க அவர்கள் தவறி விட்டனர் என்றும் முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com