பாகிஸ்தான் முகாமில் நடந்த தாக்குதலில் பலியான பயங்கரவாதிகள் எண்ணிக்கையை கூறுங்கள் - பிரதமருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானில் பாலகோட் முகாமில் நடந்த தாக்குதலில் பலியான பயங்கரவாதிகளின் உண்மையான எண்ணிக்கையை கூறுங்கள் என்று பிரதமருக்கு காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
பாகிஸ்தான் முகாமில் நடந்த தாக்குதலில் பலியான பயங்கரவாதிகள் எண்ணிக்கையை கூறுங்கள் - பிரதமருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த வாரம் பாகிஸ்தானில் உள்ள பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அதில், 300 பயங்கரவாதிகள் பலியானதாக கூறப்பட்டது.

ஆனால், கடந்த சனிக்கிழமை, நிருபர்களை சந்தித்த மத்திய மந்திரி எஸ்.எஸ்.அலுவாலியா, பலியான பயங்கரவாதிகள் எண்ணிக்கை குறித்து ஊடகங்கள் உறுதிப்படுத்தப்படாத செய்தியை வெளியிடுகின்றன. எண்ணிக்கை பற்றி பிரதமரோ அல்லது மத்திய அரசின் செய்தித்தொடர்பாளரோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

அலுவாலியா கருத்தின் அடிப்படையில், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி சரமாரியாக கேள்வி விடுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மோடிஜி.. தங்களது மத்திய மந்திரிகள், தொலைக்காட்சி செய்திகளை பொய் என்று கூறுகிறார்கள். பலியான பயங்கரவாதிகள் எண்ணிக்கையை பிரதமர் தெரிவிக்கவில்லை என்று கூறுகிறார்கள். இந்த எண்ணிக்கை உண்மையானதா? அப்படி பொய் என்றால், உண்மையான எண்ணிக்கையை பிரதமர் கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் பாலகோட் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான ஆதாரங்களை எதிர்க்கட்சிகள் கேட்ட நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒட்டுமொத்த நாடும் நமது படைகளின் பக்கம் ஒற்றுமையாக நிற்கிறது. நீங்கள் ஆதாரங்களை கேட்பது நிச்சயமாக ஏற்கத்தக்கது அல்ல. எந்த விமானம்? எப்படி தாக்கினார்கள்? எந்த குண்டு பயன்படுத்தப்பட்டது? என்று செயல்பாடு சார்ந்த விவரங்களை கேட்கிறீர்கள். இந்த விவரங்களை பகிர்ந்து கொள்வது, பாகிஸ்தானுக்குத்தான் உதவும். எந்த நாடும் இத்தகைய தகவல்களை அளிக்காது. இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com