

விஜயவாடா,
ஆந்திராவில் சில தொழில் அதிபர்கள் இல்லங்களில் சமீபத்தில் வருமான வரி சோதனை நடந்தது. இவர்களில் பெரும்பாலானோர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. சி.எம்.ரமேஷின் வீடு, அலுவலகங்களில் இன்று வருமான வரி சோதனை நடந்தது. கடப்பா மாவட்டம் எர்ரகுண்ட்லாவில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் சுமார் 15 அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டனர். ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
அதே நேரத்தில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜூபிளிஹில்சில் உள்ள ரமேஷின் இல்லத்திலும் வருமான வரி சோதனை நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் தொண்டர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
சோதனைகளின்போது, ரமேஷ் எம்.பி. டெல்லியில் இருந்தார். டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஆந்திராவுக்கு மத்திய அரசு இழைத்து வரும் அநீதியை நான் சுட்டிக்காட்டுவதால், அதற்கு பழிவாங்க மத்திய அரசு இதில் ஈடுபடுகிறது என்றார். இவர், கடப்பாவில் உருக்கு ஆலை அமைக்க வலியுறுத்தி, 3 மாதங்களுக்கு முன்பு உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.