உன்னோவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற நீதிபதிகள் மருத்துவமனை வருகை

உன்னோவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற வசதியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
உன்னோவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற நீதிபதிகள் மருத்துவமனை வருகை
Published on

புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் செங்காரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண், கடந்த சில மாதங்களுக்கு முன் கோர விபத்தில் சிக்கினார். உயிருக்கு ஆபத்தான நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்பட்ட அப்பெண் தற்போது உடல் நலம் தேறி வருகிறார்.

தனக்கு நேர்ந்தது விபத்து இல்லை எனவும் எம்.எல்.ஏ குல்தீப் செங்காரால் திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டி வருகிறார். உன்னோவ் பாலியல் வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை அறிய நீதிபதிகள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். இதற்காக மருத்துவமனையில் தற்காலிக நீதிமன்றம் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின் படி அமைக்கப்பட்டுள்ளது.

உன்னோவ் வழக்கின் விவரம்

கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதியன்று, உத்தரபிரதேசம் உன்னோவ் மாவட்டத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரின் வீட்டுக்கு 17 வயது சிறுமி ஒருவர் வேலை கேட்டு சென்று உள்ளார். அப்போது அந்த சிறுமியை எம்.எல்.ஏ. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். சிறுமி மற்றும் அவரது தாயார் புகாரின் பேரில் எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் மீது போக்சோ மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து சி.பி.ஐ. கைது செய்தது. தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண், தனது உறவுப்பெண்கள் மற்றும் வக்கீலுடன் கடந்த ஜூலை மாதம் ரேபரேலி மாவட்டத்தில் காரில் பயணம் செய்தபோது, அந்த கார் மீது ஒரு லாரி மோதியது. நம்பர் பிளேட்டில் எண்கள் மறைக்கப்பட்டிருந்த அந்த லாரி மோதியதில், அந்த சிறுமியின் உறவுப்பெண்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது வழக்கறிஞரும் லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நீதிமன்ற உத்தரவையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com