

லக்னோ
பூமியில் உயிர்கள் வாழ அத்தியாவசிய தேவையான பிராண வாயு உற்பத்தியில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மரங்கள் அடர்ந்த வன பகுதியை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் சர்வதேச வன தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில், சர்வதேச வன தினத்திற்கான தேசிய வனம் சார் பேச்சுவார்த்தைக்கான தொடக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் நாட்டில் வனங்களின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழலியல் சமநிலை பற்றி குறிப்பிட்டார்.
அவர் பேசும்போது, இயற்கையை சீரழித்து அதனால் ஏற்படும் விளைவுகளால், இந்தியாவின் வேத காலந்தொட்டு, நாம் உள்பட இன்று உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் எதிர்கொண்டு வரும் சவால்கள் என ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகளாவிய வெப்பமயமாதல் மற்றும் உலகளாவிய குளிர்நிலை என புதிதாக தோன்றியுள்ள விசயங்கள் நமக்கான ஒரு புதிய எச்சரிக்கையாக உள்ளன என்றார்.
வருங்கால தலைமுறைக்கு தேவையான இயற்கை வளங்களை பாதுகாக்கும் அவசியம் பற்றியும் அவற்றிற்கிடையே உள்ள இணைப்பை பற்றியும் அவர் பேசினார். பத்து கிணறுகள், ஒரு படிக்கிணறுக்கு சமம். பத்து படிக்கிணறுகள், ஒரு குளத்திற்கு சமம். பத்து குளங்கள் ஒரு மகனுக்கு சமம். பத்து மகன்கள் ஒரு மரத்திற்கு சமம் என்று கூறினார்.
அதனால், இயற்கையில் மரத்தின் முக்கியத்துவம் உச்சபட்ச நிலையாக கருதப்படுகிறது. வனங்களே, வாழ்வின் அடித்தளங்கள் மற்றும் இயற்கை சமநிலைக்கு முக்கியதொரு பரிணாமம் என்று அவர் பேசியுள்ளார். வனம் இருக்கும்போது நீர் இருக்கும். இவையிரண்டும் இருக்கும்போது, காற்று இருக்கும். காற்று இருக்கும்போது வாழ்க்கையும் இருக்கும்.
அது இல்லாமல் வாழ்வை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என கூறினார். இதனால், வனம், நீர், காற்று மற்றும் வாழ்வு ஆகியவற்றிற்கு இடையேயான, அடிப்படை தொடர்பை பற்றி அவர் விளக்கி கூறினார்.