எல்லையில் பதற்றம்: தேசப்பணிக்கு தயார்.. இந்திய கடற்படை அறிவிப்பால் பரபரப்பு

5 போர்க்கப்பல்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ம் தேதி பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க டிரோன் கேமராக்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
மேலும் ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாகப் பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. மற்றொருபுறம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் சில இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று (25.04.2025) சிறிய ரகத் துப்பாக்கிச் சூடுகளை நடத்தியிருந்தனர். இதற்கு இந்திய ராணுவத்தின் சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பாகிஸ்தானுடன் எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்தியாவின் 5 போர்க்கப்பல்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது.
இதன்படி ஒற்றுமையில் தான் சக்தி இருக்கிறது.. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எப்படி வேண்டுமானாலும் தயாராக இருக்கிறோம் எனும் வார்த்தைகளோடு 5 போர் கப்பல்களின் புகைப்படங்களை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.