

லக்னோ,
இன்று நாடு முழுவதும் குடியரசு தினவிழா பலத்த பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் குடியரசு தினவிழா பேரணியில் மதவாத மோதல் நேரிட்டதை அடுத்து அங்கு பதட்டம் அதிகரித்து உள்ளது. மதவாத மோதலில் ஒரு இளைஞர் உயிரிழந்தார் எனவும் பலர் காயம் அடைந்து உள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மதவாத மோதல் நேரிட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது, 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிகையாக அங்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் நிலை நிறுத்தப்பட்டு உள்ளனர்.
விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பை சேர்ந்தவர்கள் காஸ்காஞ்சில் மற்றொரு பிரிவினர் வாழும் பகுதியின் வழியாக மூவர்ணக்கொடியுடன் மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர். பில்ராம்கேட் பகுதியில் மதுரா -
பரேலி சாலையில் இந்த குழு பேரணியாக சென்ற போது அவர்கள் மீது கல் வீசப்பட்டு உள்ளது. இதனையடுத்து இருதரப்பு இடையே வாய்வழி மோதலாக உருவாகி உள்ளது. இதனையடுத்து வன்முறை பரவி உள்ளது. கோபம் அடைந்த கும்பல் ஒருவரை ஒருவரை தாக்க முயன்று உள்ளது. இதில் 12-க்கும் அதிகமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என செய்தி வெளியாகி உள்ளது.
மோதலின் போது ஒருதரப்பினர் கடைகள் மீது கற்களை வீசும் சம்பவங்கள் வீடியோவாக வெளியாகி உள்ளது, அவர்களை போலீசார் துரத்த முயற்சி செய்யும் காட்சிகளும் அதில் இடம்பெற்று உள்ளது. இந்த மோதல் சம்பவங்களில் மூன்றுபேர் படுகாயம் அடைந்து உள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிப்பதாக Firstpost செய்தி வெளியிட்டு உள்ளது. அப்பகுதியை சேர்ந்த மக்கள் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பேசுகையில், இங்கு சத்தம் எழுப்பிக்கொண்டு சுற்றவேண்டாம், அமைதியாக செல்லுங்கள் என கோரிக்கை விடுத்தோம், ஆனால் அவர்கள் இங்குள்ள சாலைகளில் சுற்றிக்கொண்டு இருந்தார்கள், மத துஷ்பிரயோக செயல்களில் ஈடுபட்டார்கள், இதனால் நிலை மோசமானது என குற்றம் சாட்டிஉள்ளனர்.
உத்தரபிரதேச மாநில உள்துறை செயலாளர் அரவிந்த் குமார் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்து உள்ள பேட்டியில் அப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பை அதிகரிக்க செய்து உள்ளது, கூட்டம் கலைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் அங்கு 144 தடை உத்தரவை பிறப்பித்து உள்ளது என குறிப்பிட்டு உள்ளார். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜி ஆனந்த் குமார் பேசுகையில், சூழ்நிலையானது இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது. சம்பவம் ஏற்கனவே திட்டமிட்டதாக தெரியவில்லை, எதிர்பாராத விதமாக நடந்து உள்ளது. மாவட்ட மாஜிஸ்திரேட், போலீஸ் கண்காணிப்பாளர் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் அங்கு சென்று உள்ளனர், என கூறிஉள்ளார்.
இடையூறு செய்ய முயற்சித்தவர்கள் அடையாளம் காணப்படுவார்கள், விசாரணையை அடுத்து அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நிலையை மாவட்ட நிர்வாகத்தால் கட்டுப்படுத்த முடியும், சூழ்நிலை மோசமாகாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு படையினருக்கு அழைப்பு விடுக்கப்படும்,எனவும் குறிப்பிட்டு உள்ளார். பாதுகாப்பு அங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மோதலில் மதுரா-பரேலி சாலையில் சென்ற வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அம்மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளது எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
கூடுதல் டிஜி ஆனந்த் குமார் பேசுகையில், விசாரணைக்காக பலரை பிடித்து வந்து உள்ளோம், முழுமையான விசாரணையை அடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,என கூறிஉள்ளார்.