சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியால் எல்லையில் பதற்றம் - ராணுவ தளபதி நரவனே லடாக் சென்றார்

சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியால் லடாக் எல்லையில் பதற்றம் நிலவும் சூழ்நிலையில், நிலைமையை ஆய்வு செய்வதற்காக ராணுவ தளபதி நரவனே நேற்று அங்கு சென்றார்.
சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியால் எல்லையில் பதற்றம் - ராணுவ தளபதி நரவனே லடாக் சென்றார்
Published on

புதுடெல்லி,

லடாக் எல்லையில் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதிஅத்துமீறி இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்திய போது இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சினை முடிவுக்கு வராத நிலையில், கடந்த மாதம் 29-ந் தேதி அங்குள்ள பங்கோங் சோ ஏரியின் தெற்கு கரை பகுதியில் சீன வீரர்கள் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டனர். இதை இந்திய வீரர்கள் முறியடித்தனர்.

இதனால் லடாக் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்து இருப்பதால், நிலைமையை நேரில் பார்வையிட ராணுவ தலைமை தளபதி நரவனே நேற்று அங்கு சென்றார். கிழக்கு லடாக்கில் பங்கோங் சோ ஏரி பகுதியில் குறிப்பிட்ட இடங்களை சீனா அத்துமீறி ஆக்கிரமிக்க மேற்கொண்ட முயற்சியை இந்தியா முறியடித்த நிலையில், ராணுவ தளபதி நரவனேயின் லடாக் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

இதுபற்றி ராணுவ வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கையில், ராணுவத்தின் செயல்பாட்டு நிலைமைகளை நேரில் ஆராய்வதற்காக தளபதி நரவனே 2 நாள் பயணமாக லடாக் வந்து சேர்ந்துள்ளார் என தெரிவித்தன.

லடாக் எல்லையில் நரவனே ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நிலைமையை ஆய்வு செய்தார். இதற்கு மத்தியில் விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, அருணாசலபிரதேசம், சிக்கிமில் உள்ள அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் விமானப்படையின் செயல்பாட்டு தயார் நிலையை நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

இதை டெல்லியில் நிருபர்களிடம் விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், விமானப்படை தளபதி பதாரியா, கிழக்கு விமானப்படை பிராந்தியத்தில் முன்னணி விமான தளங்களை பார்வையிட்டார். விமானப்படை தளபதியிடம் கிழக்கு பிராந்திய படையின் தயார் நிலை பற்றி விளக்கப்பட்டது. அவர், விமானப்படை வீரர்களை சந்தித்து கலந்துரையாடவும் செய்தார். தங்களது கடமையை சரியான நேரத்தில் விடா முயற்சியுடன் செய்யும்படி அவர்களை கேட்டுக்கொண்டதுடன், அவர்களது செயல்பாடுகளை பாராட்டினார் என குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அமெரிக்கா-சீனா பாதுகாப்பு உத்தி ஒத்துழைப்பு அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு சரியான முறையில் பதிலடி கொடுக்கும் திறன் இந்திய ராணுவத்துக்கு உண்டு என்றார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

இந்தியாவுக்கு மிகவும் சிக்கலான அச்சுறுத்தல்களும், சவால்களும் எழுந்து உள்ளன. மரபு ரீதியிலான மோதல்களுக்கு மட்டுமின்றி அணுசக்தி ரீதியிலான அச்சுறுத்தல்களுக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த காலத்தில் சீனா சில முறை ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டதை நாம் கண்டு இருக்கிறோம். அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அதை சரியான வழியில் கையாண்டு சரியான பதிலடி கொடுக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.

சீனாவுடன் நமக்கு இருந்து வரும் எல்லை பிரச்சினையை சாதகமாக பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஏதாவது விஷமத்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டால், அந்த நாடு பெரும் இழப்பை சந்திக்க வேண்டி இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

லடாக் எல்லைப்பகுதியில் ஏற்கனவே உள்ள நிலைப்பாட்டை தன்னிச்சையாக மாற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டு உள்ளது. அதன் நேரடி விளைவுதான் தற்போது அங்குள்ள சூழ்நிலைக்கு காரணம். அதாவது கடந்த 4 மாதங்களாக அங்கு ஏற்பட்டுள்ள பதற்றநிலைக்கு சீனாவின் நடவடிக்கையே காரணம் ஆகும்.

எல்லா பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. எனவே எல்லைப் பகுதியில் நிறுத்தியுள்ள படைகளை சீனா வாபஸ் பெற்று, அங்கு அமைதி நிலவ வழிவகை செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com