பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் சதி திட்டத்திற்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன.
பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
Published on

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது.

இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம், பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத சூழல் நிலவி வரும் நிலையில், அது தொடர்பாக 32 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) இன்று சோதனை மேற்கொண்டது.

காஷ்மீரின் நிலைத்தன்மையை சீர்குலைக்க செய்யும் நோக்குடனான, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் சதி திட்டத்திற்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காஷ்மீரின் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது.

இதன்படி, தி ரெசிஸ்டன்ட் பிரன்ட், ஐக்கிய விடுதலை முன்னணி ஜம்மு மற்றும் காஷ்மீர், முஜாகிதீன் கஜ்வத்-உல்-ஹிந்த், ஜம்மு மற்றும் காஷ்மீர் சுதந்திர போராளிகள், காஷ்மீர் டைகர்ஸ், பி.ஏ.ஏ.எப் மற்றும் பிற அமைப்புகள் என பாகிஸ்தான் ஆதரவு பெற்ற அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் அடிமட்ட பணியாளர்களின் குடியிருப்புகள், வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோன்று தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அல்-பத்ரா போன்றவற்றுடன் தொடர்புடையவர்களின் இடங்களிலும் சோதனை நடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com