

புதுடெல்லி,
நாட்டின் சுதந்திர தினம் வருகிற 15ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது டெல்லியில் மிகப்பெரும் தாக்குதலை அரங்கேற்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவுடன் இந்த தாக்குதலை அரங்கேற்றுவதற்காக பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை கூறி உள்ளது. சுதந்திர தினத்தை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருக்கும் தகவல் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே மிகுந்த உஷார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்பு படையினர் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றனர். இதனையடுத்து டெல்லியில் முக்கியமான இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. சுதந்திர தினவிழாவுக்காக டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.