இந்தியாவில் கால் பதிக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம்

டெஸ்லா தனது இந்திய பிரிவுக்கு முக்கிய பொறுப்புகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
பிரபல அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது நிறுவனத்தை இந்தியாவில் தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகளை செய்து வருகிறது.
இதனிடையே பிரதமர் மோடி தனது அமெரிக்கப் பயணத்தின்போது, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கை சந்தித்ததை அடுத்து, டெஸ்லா தனது இந்தியப் பிரிவுக்கு டெல்லி மற்றும் மும்பையில் முக்கிய பொறுப்புகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி, வணிகத்தை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட 13 பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதாக டெஸ்லா நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் அறிவிப்பின்படி மும்பை மற்றும் டெல்லியில் 13 வகையான பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அந்தவகையில் நிதியமைச்சக தரவுகளின்படி, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் குஜராத், ஆந்திர பிரதேசத்தில் ஆலையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் முதல் கட்டமாக மும்பை மற்றும் டெல்லி, ஐதாராபாத்தில் தலா 2 ஷோரூம்களை டெஸ்லா நிறுவனம் திறக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள நபர்கள் மேலும் விவரங்களுக்கு டெஸ்லாவின் LinkedIn பக்கத்தைப் பார்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பல வருட தொடர்புக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது. அதிக இறக்குமதி வரிகள் குறித்த கவலைகள் காரணமாக டெஸ்லா நிறுவனம் முன்பு சந்தையில் நுழைய தயங்கியது. இருப்பினும், இந்தியா சமீபத்தில் சொகுசு கார்களுக்கான சுங்க வரியைக் குறைத்து, 40,000 டாலர்களுக்கும் (தோராயமாக ரூ. 35 லட்சம்) அதிகமான விலை கொண்ட வாகனங்களுக்கான வரியை 110 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாகக் குறைத்தது, இது டெஸ்லாவை விரிவுபடுத்த ஊக்கப்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் டெஸ்லா இந்த ஆண்டு இந்தியாவில் குறைந்த விலை மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.