

புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா பரவலின் 2-வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறியும் வகையில் பரிசோதனைகளும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் பல கட்டங்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த சூழலில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இலவசம் என்ற திருத்தப்பட்ட புதிய தடுப்பூசி கொள்கை ஜூன் 21ஆம் தேதி முதல் அமலில் உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 27,60,345 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 33,57,16,019 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில், 5,96,16,139 பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும், 18 முதல் 44 வயதுடையோருக்கு 9,37,82,652 தடுப்பூசிகள், 45 முதல் 59 வயதுக்கு மேற்பட்டோருக்கு 10,49,61,999 தடுப்பூசிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 9,24,73,680 தடுப்பூசிகள், முன்களம் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 4,44,97,688 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 19,21,450 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 41,20,21,494 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.