

புதுடெல்லி,
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் 7 இடங்களில் பி.எம். மித்ரா எனப்படும் ஒருங்கிணைந்த மெகா ஜவுளி மற்றும் ஆடை பூங்கா அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 4,445 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் 21 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் ஜவுளி உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதிக்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் தமிழ்நாடு, ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, ஆந்திரா, குஜராத், அசாம், கர்நாடகா, மத்திய பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள், தங்கள் மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்கா அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.