செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு தம்பிதுரை பதில்

அமித்ஷா - செங்கோட்டையன் சந்திப்பு குறித்து உறுதியான தகவல் தெரியவில்லை என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியுள்ளார்.
புதுடெல்லி,
அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கடந்த 5-ந் தேதி ஈரோடு மாவட்டம் கோபியில் பேட்டி அளித்தபோது, ‘அ.தி.மு.க.வில் இருந்து விலகியவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தார். இது அ.தி.மு.க.விலும், தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது கட்சி பதவிகளை பறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்தநிலையில் செங்கோட்டையன் மன நிம்மதிக்காக ஹரித்துவார் சென்று குழந்தை வடிவில் உள்ள ராமரை தரிசிக்க செல்வதாக கூறினார். இதனிடையே நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் மத்திய மந்திரி அமித்ஷாவின் இல்லத்துக்கு செங்கோட்டையன் திடீரென்று சென்றதாகவும், அங்கு மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜனதா தலைவர்கள் சிலரை சந்தித்து செங்கோட்டையன் பேசியதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில், டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. உள்துறை மந்திரியை சந்தித்தபோது, ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வருகை தந்தார். ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை மாற்றக்கோரி, ரெயில்வே மந்திரியிடம் வலியுறுத்தினேன். மக்கள் பணி செய்யவும், இயக்கம் வலுப்பெறவும் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.
இதனிடையே அமித் ஷா - செங்கோட்டையன் சந்திப்பு குறித்த கேள்விக்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
டெல்லி வந்த செங்கோட்டையன் உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் என்ன பேசினார் என்று தெரியாது. நானும் அமித்ஷாவை சந்தித்தேன். செங்கோட்டையன் உடனான சந்திப்பு குறித்து அமித்ஷா ஏதுவும் கூறவில்லை. அமித்ஷா - செங்கோட்டையன் சந்திப்பு குறித்து உறுதியான தகவல் தெரியவில்லை.
அதிமுக கட்டுக்கோப்பான கட்சி, அதற்கேற்ப நிர்வாகிகள் நடந்துகொள்வார்கள். அதிமுக என்பது ஜனநாயகக்கழகம், கட்டுக்கோப்பான ஒரு இயக்கம். அதிமுகவில் இருப்பவர்கள் பற்றி மட்டுமே கருத்து சொல்ல முடியும். வெளியே சென்றவர்கள் பற்றி தெரியாது. என்னை போன்ற தொண்டர்கள் பழனிசாமியின் தலைமையை ஏற்று கட்டுக்கோப்புடன் செயல்படுகிறோம். பொதுக்குழு, செயற்குழு முடிவின்படி, அவை தந்த அதிகாரங்களின்படி பழனிசாமி செயல்படுகிறார். எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது தலைமையில் ஒன்றுபட்ட இயக்கமாக உள்ள அதிமுகவை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.ஈபிஎஸ்-ன் முடிவுதான் சரியான முடிவு, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி
இவ்வாறு அவர் கூறினார்.






