

பாட்னா,
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்திருந்தது. இதனை விமர்சிக்கும் வகையில் அக்கட்சியின் துணை தலைவர் மற்றும் அரசியல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் பேசினார். இந்த சட்டங்களுக்கு நிதீஷ் குமார் ஆதரவாக இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிஷோர் விமர்சனம் செய்தது அக்கட்சியினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் கடந்த 2 நாட்களாக அக்கட்சியினர் கிஷோரை குற்றம் சாட்டி பேசி வந்தனர். நிதீஷ் குமார் நேற்று கூறும்பொழுது, அமித் ஷா கட்சியில் சேர்க்கும்படி கூறியதனாலேயே கிஷோர் கட்சியில் சேர்க்கப்பட்டார் என கூறினார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த கிஷோர் நிதீஷ் குமாரை ஒரு பொய்யர் என்றும் கூறினார்.
இந்நிலையில் அக்கட்சியில் இருந்து கிஷோர் நீக்கப்பட்டார். இதுபற்றி பிரசாந்த் கிஷோர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நன்றி நிதீஷ் குமார் அவர்களே. பீகாரின் முதல் மந்திரியாக நீங்கள் பதவியை தக்க வைத்து கொள்ள எனது வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு ஆசி வழங்கட்டும் என கிண்டலாக தெரிவித்து உள்ளார்.