

அகமதாபாத்
குஜராத்தில் கடந்த பிப்ரவரி 21 அன்று 6 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அகமதாபாத் மாநகராட்சியின் 48 வார்டுகளில் 192 இடங்களுக்கும், சூரத் மாநகராட்சியின் 30 வார்டுகளில் 120 இடங்களுக்கும், வதோதரா மாநகராட்சியின் 19 வார்டுகளில் 76 இடங்களுக்கும்,
ராஜ்கோட் மாநகராட்சியில் 18 வார்டுகளில் 72 இடங்களுக்கும் பாவ்நகர் மாநகராட்சியில் 13 வார்டுகளில் 52 இடங்களுக்கும் ஜாம்நகர் மாநகராட்சியில் 16 வார்டுகளில் 64 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது
இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது, வாக்கு எண்ணும் பணி இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.மாலை 5 மணி வரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 576 இடங்களில் 334 இடங்களை பா.ஜனதா வென்று உள்ளது. அகமதாபாத் உள்பட 6 மாநகராட்சிகளை பா.ஜனதா கைப்பற்றி உள்ளது.
இதுவரை 36 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தத் தேர்தல்களில் புதிதாக நுழைந்த ஆம் ஆத்மி கட்சி 12 இடங்களை வென்று உள்ளது. ஆறு மாநகராட்சிகளில் 470 வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி நிறுத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி இந்த தேர்தல் முடிவுகளைப் பாராட்டியதோடு, குஜராத்துக்கு சேவை செய்வது எப்போதும் ஒரு மரியாதை என்றும் கூறி உள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
"நன்றி குஜராத்! மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சித் தேர்தல்களின் முடிவுகள், வளர்ச்சி மற்றும் நல்லாட்சியின் அரசியல் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை தெளிவாகக் காட்டுகின்றன. பாஜகவை மீண்டும் நம்பியதற்காக மாநில மக்களுக்கு நன்றி. குஜராத்திற்கு சேவை செய்வதற்கு எப்போதும் ஒரு மரியாதை" என்று அவர் டுவீட் செய்துள்ளார்.
இந்த தேர்தல் முடிவுகளை குஜராத்தில் மிகச் சிறந்த ஒன்றாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைத்தார்.
அமித்ஷா தனது டுவிட்டரில் கூறி உள்ளதாவது:-
"பாஜக போட்டியிட்ட 85 சதவீத இடங்களை வென்றுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத் முழுவதும் காங்கிரஸ் 44 இடங்களை மட்டுமே வென்றது, அதே நேரத்தில் பாவ்நகர் நகராட்சியில் மட்டும் பாஜக 44 இடங்களைப் பெற்றது" என்று அவர் கூறி உள்ளார்.
இந்த தேர்தல் முடிவுகளுக்கு முதல்வர் விஜய் ரூபானி மற்றும் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் வாக்காளர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்து உள்ளனர்.
"இந்த தேர்தல்களில் பாஜகவின் மிகப்பெரிய வெற்றி குஜராத் மக்களின் வெற்றியாகும். இது பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சியின் அரசியலின் மிகப்பெரிய வெற்றியாகும்" என்று ரூபானி கூறி உள்ளார்.
ஆறு மாநகராட்சிகளின் வாக்காளர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்தத் தேர்தலில் கடுமையாக உழைத்த அனைத்து பாஜக தொண்டர்களுக்கும் எனது நன்றி. பாஜக மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை பாஜக விடாது காப்பாற்றும் என்று குஜராத் மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். 6 மாநகராட்சிகளின் வளர்ச்சிக்கு அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என கூறி உள்ளார்.