‘இலவச விளம்பரத்திற்கு நன்றி..’ - கரப்பான்பூச்சி உருவபொம்மை எரிப்பு குறித்து அபிஜீத் திப்கே கருத்து

ராவணன் உள்ளிட்ட உருவபொம்மைகளுடன் 30 அடி உயர கரப்பான்பூச்சி பொம்மையை ஸ்ரீ கேசவ் ராம்லீலா கமிட்டி எரித்துள்ளது.
‘இலவச விளம்பரத்திற்கு நன்றி..’ - கரப்பான்பூச்சி உருவபொம்மை எரிப்பு குறித்து அபிஜீத் திப்கே கருத்து
Published on: 

புதுடெல்லி

டெல்லி பீதாம்புராவில் இன்று ராம்லீலா விழா நடைபெற்றது. தீமையை நன்மை வெற்றி கொள்ளும் வகையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாத் உள்ளிட்டோரின் உருவபொம்மைகள் வைக்கப்பட்டன.

30 அடி உயரம்

தீமையை, நன்மையானது வெற்றி கொள்ளும் செய்தியை வலியுறுத்தும் வகையில் ஒரு மரபாக, இந்த உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடைபெறும். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொள்வார்கள்.

இந்த சூழலில், ராவணன் உள்ளிட்ட உருவபொம்மைகளுடன் 30 அடி உயர கரப்பான்பூச்சி பொம்மையை ஸ்ரீ கேசவ் ராம்லீலா கமிட்டி எரித்துள்ளது. தூய்மை இந்தியா விழிப்புணர்வை ஏற்படுத்தவே அசுத்தத்தின் அடையாளமான கரப்பான் எரிக்கப்படுவதாக விழா அமைப்பாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

உருவபொம்மை எரிப்பு

இதன்படி, ராவணனின் சேனையில் அசுரர்களில் ஒன்றாக கரப்பான்பூச்சியும் உருவகப்படுத்தப்படும். தூய்மை இந்தியா மற்றும் தூய்மை டெல்லி திட்டத்தின் கீழ் கழிவுப்பொருள் மற்றும் அழுக்கு போன்றவற்றை நீக்குவதற்கான அடையாளமாக அவை எரிக்கப்படும். இந்த அமைப்பு இதற்கு முன்பு, நக்சலைட்டுகள், பயங்கரவாதிகள் உள்ளிட்டோரை பிரதிபலிக்கும் வகையிலான உருவபொம்மைகளை எரித்து உள்ளது.

ஆம் ஆத்மி புகார்

கரப்பான்பூச்சி உருவபொம்மை எரிக்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அதன் டெல்லி தலைவர் சவுரப் பரத்வாஜ், டெல்லி போலீசில் புகார் அளித்த புகாரில், கரப்பான்பூச்சி உருவபொம்மை எரிப்பு மத உணர்வுகளை புண்படுத்தி விட்டது என்று தெரிவித்து உள்ளார்.

இலவச விளம்பரம்

இந்நிலையில், கரப்பான்பூச்சி உருவபொம்மை எரிக்கப்பட்டது குறித்து சி.ஜே.பி. நிறுவனர் அபிஜீத் திப்கே கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இலவச விளம்பரத்திற்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் சி.ஜே.பி. வழக்கறிஞர் ரத்னா சிங் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “தசரா அன்று கரப்பான்பூச்சி உருவத்தை எரிப்பது, ஆளுங்கட்சி எவ்வளவு பதற்றத்தில் இருக்கிறது என்பதையே காட்டுகிறது. நீங்கள் எங்களை போட்டியாக கருதும் அளவிற்கு நாங்கள் போதுமான தாக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்பதை அறிவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com