

திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சசி தரூர், 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்திய நாடு இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் எனக் கூறினார்.
தொடர்ந்து அவர், 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்றால் நமது நாட்டின் ஜனநாயகம் சிதைந்து போய் விடும். புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டியிருக்கும். இந்து ராஷ்டிரா கொள்கைகள் புதிதாக உருவாக்கப்பட்டு, சிறுபான்மையினருக்கான சமத்துவம் மறுக்கப்படும்.
இந்திய நாடு இந்து பாகிஸ்தானக மாறிவிடும். மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல், ஆசாத் போன்ற இந்திய விடுதலை போராட்ட தலைவர்கள் எதற்காக போராடினார்களோ? அது இல்லாமல் போய் விடும் என கூறினார்.
இந்நிலையில் சசி தரூரின் பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில், பாஜக செய்தி தொடர்பாளர் சமித் பத்ரா பேராசையின் காரணமாக பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கிய காங்கிரஸ் கட்சி இந்தியாவை தரம் தாழ்த்தியது. சசி தரூரின் பேச்சு இந்து ராஷ்டிராவை அவமதிப்பதாக உள்ளது. மேலும், சசி தரூரின் இப்பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.
எனினும், தரூரின் பேச்சுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. இந்த நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் அலுவலகம் இன்று அடித்து நொறுக்கப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதல் பற்றி தரூர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாரதீய ஜனதா கட்சியின் யுவமோர்சா மற்றும் சங்கி குண்டர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள எனது தொகுதி அலுவலகத்தினை அடித்து நொறுக்கியுள்ளனர்.
அவர்கள், கதவுகள், சுவர்கள், வாசல் ஆகியவை மீது என்ஜின் ஆயிலை ஊற்றி உள்ளனர். மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்களை விரட்டி உள்ளனர். எனக்கு எதிராக பேனர்களை வைத்தனர். பாகிஸ்தானுக்கு செல்லும்படி கோஷங்களையும் எழுப்பினர் என தெரிவித்து உள்ளார்.
இந்து ராஷ்டிரா கனவை விட்டு விட்டீர்களா? என்ற எளிமையான கேள்விக்கு பாரதீய ஜனதா அளித்துள்ள பதில், தாக்குதல் மற்றும் வன்முறை. அவர்களின் இந்த முகம் திருவனந்தபுரத்தில் இன்று வெளிப்பட்டு உள்ளது. இந்த சங்கி குண்டர்கள் நாங்கள் இல்லை என பெருமளவிலான இந்துக்கள் கூறுவார்கள் என அவர் தெரிவித்து உள்ளார்.