கையெழுத்து சரியில்லை என்று மாணவனை தாக்கிய ஆசிரியர் பணி நீக்கம்

பலமநேரில் உள்ள தனியார் பள்ளியில் கையெழுத்து சரியில்லை என்று கூறி மாணவனை தாக்கிய ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
கையெழுத்து சரியில்லை என்று மாணவனை தாக்கிய ஆசிரியர் பணி நீக்கம்
Published on

ஸ்ரீ காளஹஸ்தி,

சித்தூர் மாவட்டம் பலமநேரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஹரீஷ் (வயது 14) என்ற மாணவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவனின் கையெழுத்து சரியாக இல்லை என்று கூறி, ஆங்கில ஆசிரியர் சிவா என்பவர் மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த சம்பவம் குறித்து சித்தூர் மாவட்ட துணை கல்வி அதிகாரி சந்திரசேகர் பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது மாணவனை, ஆசிரியர் தாக்கியது குறித்து சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் ஆசிரியர், மாணவனை தாக்கியது உண்மை என்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனுக்கு ஆறுதல் தெரிவித்து, மாணவனின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டார். இந்தநிலையில் மாணவனை தாக்கியதாக ஆங்கில ஆசிரியர் சிவாவை பணி நீக்கம் செய்வதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

மேலும் ஆசிரியர் தாக்கியதில் படுகாயம் அடைந்த மாணவனின் மருத்துவ செலவு அனைத்தையும் தாங்களே செலுத்துவதாக பள்ளி நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கு சித்தூர் மாவட்ட துணை கல்வி அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com