

புதுச்சேரி,
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த், தி.மு.க. சார்பில் சேது செல்வம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சலீம், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திக்குமாரி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விநாயகம் போட்டியிடுவார் என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வேணு கோபால் அறிவித்துள்ளார். அவர் இன்று (புதன்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிலையில் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி, நேரு எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகம் சென்றனர். அங்கு த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்தை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் முறைப்படி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கோரி கடிதம் கொடுத்தனர். இதன் மூலம் தட்டாஞ்சாவடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு த.வெ.க. தனது ஆதரவை உறுதிப்படுத்தி உள்ளது.