மும்பை பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது- மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

மும்பை தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தற்போதும் பாதுகாப்பாக இருப்பதாக ஜெய்சங்கர் வேதனை தெரிவித்தார்.
Image Courtesy: PTI 
Image Courtesy: PTI 
Published on

மும்பை,

பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கப்படுவதற்கு எதிராக உலக நாடுகள் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் ஐ.நா பாதுகாப்பு அவையின் முறைசாரா மாநாடு மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் ஐ.நா பாதுகாப்பு அவையின் தலைவர் மைக்கேல் மவுஸ்ஸா, இந்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஜெய்சங்கர் பேசியதாவது:

பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதில் சில நேரங்களில் ஐ.நா-வால் போதிய வெற்றியை பெற முடியாததற்கு அரசியல் காரணங்கள் உள்ளன. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி நிகழ்த்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தற்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதல் மும்பை மீதானது அல்ல. அது சர்வதேச சமூகத்திற்கு எதிரானது. மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், அவர்கள் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

பயங்கரவாதிகளை பொறுப்பேற்கச் செய்வதில் இருந்தும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் இருந்தும் சர்வதேச சமூகம் பின்வாங்காது என்ற செய்தியை நாம் வலுவாக வழங்க வேண்டியது மிகவும் முக்கியம்.

இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.

2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பை தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். அதில், பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டு வீழ்த்த, அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் பிடிபட்டான். வழக்கு விசாரணைக்கு பிறகு 2012ம் ஆண்டு அஜ்மல் கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com