இந்தியாவில் இதுவரை நடந்ததில் 2-வது பெரிய விமான விபத்து

1962-ம் ஆண்டு முதல் ஆமதாபாத்தில் நடந்த தற்போதைய விபத்து வரை 13 முறை பெரிய அளவில் விமான விபத்துகள் நடந்துள்ளன.
ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா (போயிங் 787) விமானம் இயந்திர கோளாறு காரணமாக அருகில் உள்ள மருத்துவ மாணவர்கள் விடுதியின் மீது விழுந்து வெடித்து சிதறிய விபத்தில் 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுமட்டுமல்லாது, மாணவர் விடுதி கட்டிடத்தில் இருந்தவர்களில் 7 பேர் இறந்துபோனார்கள். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தற்போது, அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் விமான வடிவமைப்புகளிலும் அவ்வப்போது புகுத்தப்பட்டு வந்தாலும், விமான விபத்துகள் என்பது எப்போதாவது நடந்து, பெரிய உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி விடுகின்றன.
இந்தியாவில் இதுவரை 1962-ம் ஆண்டு முதல் ஆமதாபாத்தில் நடந்த தற்போதையது வரை 13 முறை பெரிய அளவில் விமான விபத்துகள் நடந்துள்ளன. இதுபோக, விமானப் படை விமானங்கள் விபத்துக்குள்ளாகி ஒரு சிலர் பலியான சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்த விமான விபத்துகளில் அதிக அளவில் உயிர் சேதங்களை ஏற்படுத்திய விமான விபத்து 1996-ம் ஆண்டு நவம்பர் 12-ந் தேதி இந்திய வான்வெளியில் நடந்தது. அதாவது, சவுதி ஏர்லைன்ஸ் விமானமும், கஜகஸ்தான் நாட்டு விமானமும் டெல்லி அருகே சர்கி தாத்ரி என்ற பகுதியில் நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரு விமானங்களில் இருந்த 349 பயணிகள் பரிதாபமாக இறந்துபோனார்கள். இதுதான் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய விமான விபத்து ஆகும்.
இந்த விமான விபத்துக்கு பிறகு 2-வதாக நடந்த பெரிய விபத்து, நேற்று நடந்த ஆமதாபாத் விமான விபத்துதான். இயந்திர கோளாறு காரணமாக விமான விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தாலும், விமானத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள கருப்பு பெட்டியை ஆய்வு செய்த பிறகுதான் முழு விபரம் தெரியவரும்.
இந்தியாவில் நடந்த 3-வது பெரிய விமான விபத்து, 1978-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நடந்தது. மும்பையில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மும்பை பாந்த்ரா கடற்கரையில் விழுந்து நொறுங்கியதில் 213 பயணிகள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






