விவசாயிகளுடனான 9-வது சுற்று பேச்சுவார்த்தையிலும் முடிவு ஏற்படவில்லை: 19-ந் தேதி மீண்டும் சந்தித்து பேசுகிறார்கள்

டெல்லியில் போராடும் விவசாயிகள் சங்க தலைவர்களுடன், மத்திய மந்திரிகள் நேற்று நடத்திய 9-வது சுற்று பேச்சு வார்த்தையிலும் முடிவு ஏற்படவில்லை. 19-ந் தேதி மீண்டும் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுடனான 9-வது சுற்று பேச்சுவார்த்தையிலும் முடிவு ஏற்படவில்லை: 19-ந் தேதி மீண்டும் சந்தித்து பேசுகிறார்கள்
Published on

புதுடெல்லி,

நாடு, கொரோனாவுக்கு எதிராக போராடும் வேளையில், விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் போராடி கொண்டிருக்கிறார்கள்.

டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு, நவம்பர் 28-ந் தேதியில் இருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர 8 சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தையில், விவசாயிகள் அறுவடைக்கு பின்னர் வைக்கோல் எரிப்பது கிரிமினல் குற்றம் ஆகாது, அதற்கு அபராதம் விதிக்கப்படாது எனவும், விவசாயிகளுக்கான மின்சாரத்துக்கு மானியம் தொடரும் எனவும் இரு தரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டு உடன்பாடு ஏற்பட்டது.

ஆனால் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்கு சட்ட அந்தஸ்து வேண்டும் என்ற 2 பிரச்சினைகளில் முட்டுக்கட்டை தொடர்கிறது.

7 மற்றும் 8 சுற்று பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த 11-ந் தேதி அதிரடியாக தடை விதித்தது. அத்துடன், விவசாயிகளுடன் பேச்சு நடத்தி அறிக்கை அளிப்பதற்காக 4 உறுப்பினர் குழுவையும் அமைத்தது.

இந்த நிலையில், மத்தியஅரசுக்கும், விவசாயிகள் அமைப்புகளுக்கும் இடையான 9-வது சுற்று பேச்சுவார்த்தை டெல்லி விஞ்ஞான பவனில் நேற்று திட்டமிட்டபடி நடந்தது. இதில் மத்திய அரசின் சார்பில் விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர், உணவு மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக ராஜாங்க மந்திரி சோம் பர்காஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் தரப்பில் 40 அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் பேசிய விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமர், அரசாங்கம் பிடிவாதமாக இருப்பதாகவும், இதை ஒரு கவுரவ பிரச்சினையாக ஆக்குவதாகவும் நீங்கள் (விவசாயிகள்) தொடர்ந்து கூறுகிறீர்கள். கொஞ்சம் நெகிழ்வுத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டாமா? வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையில் விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டிருக்க கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட 5 மணி நேரம் நீடித்தது. இடையே மதிய உணவுக்காக சிறிது நேரம் இடைவெளி விடப்பட்டது.

விவசாயிகள் தரப்பில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அரசாங்கம் தரப்பில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது, தேவையான மாற்றங்களை செய்ய தயார் என உறுதி அளிக்கப்பட்டது.

இருவரும் தத்தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் எந்த முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிந்தது. இதனால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.

இருந்தபோதும், இரு தரப்பினரும் வரும் 19-ந் தேதி மதியம் 12 மணிக்கு மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு எடுத்தனர்.

இதை பேச்சுவார்த்தைக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய மத்திய விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு நல்ல சூழ்நிலையில் 3 வேளாண் சட்டங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் ஒரு முடிவான கட்டத்தை எட்ட முடியவில்லை.

வேளாண் சட்டங்களை நன்றாக புரிந்துகொண்டு, சில உறுதியான திட்டங்களை தெரிவிக்கக்கூடிய ஒரு முறைசாரா குழுவை அவர்கள் உருவாக்க முடியும் என்று நாங்கள் யோசனை கூறினோம். விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன, எந்தெந்த பிரிவுகளில் அவர்களுக்கு பிரச்சினை உள்ளது என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான், அவற்றை அரசாங்கம் திறந்த மனதுடன் பரிசீலிக்க முடியும்.

19-ந் தேதி நடக்கிற 10-வது சுற்று பேச்சுவார்த்தையின்போது, ஒரு முடிவான கட்டத்தை அடைய முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது.

எல்லோரும் சுப்ரீம் கோர்ட்டு மீது முழுமையான உறுதியுடன் உள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள குழு முன்னிலையில் அரசாங்கம் தனது தரப்பு கருத்தை தெரிவிக்கும். விவசாயிகளின் அமைப்புகள் பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்று விரும்புகின்றன. அதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழுவும், விவசாயிகளின் நலனுக்காக செயல்படும்.

எங்கள் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு பிறக்கலாம். சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள குழுவின் மூலமும் தீர்வு வரலாம்.

பேச்சுவார்த்தையின்மூலம் தீர்வு காணத்தான் நாங்கள் முயற்சிக்கிறோம். பாதகமான வானிலை மற்றும் கொரோனா பெருந்தொற்று நிலைமை ஆகியவற்றின் காரணமாக போராட்டம் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து விவசாயிகள் அமைப்பின் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

விவசாய சங்க தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹான் கூறுகையில், பேச்சுவார்த்தையின்போது, எங்களுடைய போராட்டத்துக்கு தளவாட ஆதரவை வழங்கும் பஞ்சாப் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தும் விவகாரத்தை எழுப்பினோம். நாங்கள் மீண்டும் 19-ந் தேதி மதியம் 12 மணிக்கு சந்தித்து பேசுவது என முடிவு எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் கவிதா குருகந்தி, அரசாங்கமும், விவசாயிகள் அமைப்புகளும் நேரடி பேச்சுவார்த்தையை தொடர்வது என்று மீண்டும் உறுதி எடுத்துள்ளனர் என கூறினார்.

மற்றொரு விவசாய அமைப்பின் தலைவரான தர்ஷன் பால், 3 சட்டங்கள் தொடர்பாக நல்லதொரு விவாதம் நடந்தது. சில முடிவுகளுக்கு வாய்ப்பு உள்ளது. நாங்கள் நேர்மறையானவர்கள் என குறிப்பிட்டார்.

ராகேஷ் திகாய்த் என்ற விவசாய அமைப்பின் தலைவர், பேச்சுவார்த்தையின் மூலம் முடிவு எட்டப்பட வேண்டும், கோர்ட்டின் வழியாக அல்ல என்று அரசாங்கம் சொல்கிறது. அந்த கருத்தையே எல்லோரும் கொண்டிருக்கிறோம். சில முடிவு எட்டப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். 9-வது சுற்று பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாததால், டெல்லியில் கடும் குளிரின் மத்தியிலும் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com