ஆந்திராவில் அரங்கேறிய கொடூரம்; 2 மகள்களை அடித்துக்கொன்ற பள்ளி முதல்வர்-கல்லூரி பேராசிரியர் தம்பதி; மூடநம்பிக்கையால் நடந்த நரபலி

மூடநம்பிக்கை, மனிதனை எந்த கொடூர எல்லைக்கும் கொண்டு செல்லும், மெத்த படித்தவர்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதற்கு உதாரணமான சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.
நரபலி கொடுக்கப்பட்ட மகள்களான சாய் திவ்யா, அலேக்கியாவுடன் பெற்றோர் புருஷோத்தமன்-பத்மஜா.
நரபலி கொடுக்கப்பட்ட மகள்களான சாய் திவ்யா, அலேக்கியாவுடன் பெற்றோர் புருஷோத்தமன்-பத்மஜா.
Published on

தங்கள் அருமைப்புதல்விகளை பெற்றோரே கொடூரமாக தாக்கி பலி கொடுத்த பயங்கரம் அரங்கேறியிருக்கிறது.

உயர்படிப்பு தம்பதி

நெஞ்சைப் பதறவைக்கும் இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியைச் சேர்ந்த தம்பதி, புருசோத்தம் நாயுடு- பத்மஜா.எம்.எஸ்சி., பிஎச்டி பட்டம் பெற்ற புருசோத்தம், மதனப்பள்ளி அரசு மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக இருக்கிறார்.முதுநிலை பட்டதாரியான பத்மஜா, பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றவர். இவர் உள்ளூர் தனியார் பள்ளி ஒன்றில் தாளாளர் மற்றும் முதல்வராக இருக்கிறார்.இந்த தம்பதிக்கு 2 மகள்கள். அவர்களில் மூத்தவரான அலேக்கியா (27) முதுநிலை பட்டப்படிப்பு பயின்று வந்தார். இளைய மகள் சாய் திவ்யா (22), சென்னை அரும்பாக்கத்தில் உள்ள,

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கே.எம். இசைக்கல்லூரியில் பயின்று வந்ததாகக் கூறப்படுகிறது.தற்போது கொரோனா விடுமுறை காரணமாக மகள்கள் இருவரும் மதனப்பள்ளியில் பெற்றோருடன் தங்கியிருந்தனர்.

கொலைகாரியான தாய்

இந்நிலையில், புருசோத்தமும், பத்மஜாவும் நேற்று முன்தினம் இரவு 2 மகள்களின் சம்மதத்துடன் வீட்டில் வைத்து பூஜை செய்திருக்கின்றனர். அப்போது ஒரு மகளுக்கு தலையை முழுவதுமாக மொட்டை அடித்திருக்கின்றனர். பின்னர், பாசத்தாய் பத்மஜா, ஒரு சூலாயுதத்தால் இளைய மகளை குத்திக்கொன்றிருக்கிறார். தொடர்ந்து, மூத்த மகளை ஒரு உடற்பயிற்சி எடைக்கருவியால் துடிதுடிக்க தாக்கி உயிரைப் பறித்திருக்கிறார். அதையெல்லாம், தந்தை புருசோத்தம் அமைதியாக வேடிக்கை பார்த்திருக்கிறார்.

ரத்த வெள்ளத்தில் மகள்கள் மாண்டபின், அதுகுறித்து புருசோத்தமே தன்னுடன் பணிபுரியும் ஒருவருக்கு தொலைபேசியில் கூறியிருக்கிறார்.அதிர்ச்சி அடைந்தபோன அவர், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். விரைந்து சென்று புருசோத்தம் வீட்டை அடைந்த போலீசார், உயிரற்ற சடலங்களாக இரு பெண்களையும் கண்டனர். சுற்றிலும் பல பூஜைப்பொருட்கள் காணப்பட்டன.

நரபலி?

அப்போது சிறிதும் அலட்டிக்கொள்ளாத அந்த கொடூர தாய்-தந்தை, ஒருநாள் பொறுத்திருக்கும்படியும், அதற்குள் தங்கள் மகள்கள் மீண்டும் உயிர்பெற்று விடுவார்கள் என்றும் கூறியதாகத் தெரிகிறது.

அப்போது அவர்கள் இருவரும் சிவப்பு நிற ஆடையில் இருந்துள்ளனர்.கணவன்-மனைவியை கைது செய்த போலீசார், 2 பெண்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

அந்தப் பெற்றோர், நரபலியாக தங்கள் மகள்களை கொன்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக மதனப்பள்ளி போலீஸ் துணை சூப்பிரண்டு ரவி மனோகராச்சாரி தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பிட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

தடுக்கப்பட்ட தற்கொலை

மகள்களை கொன்றபின், தாங்களும் தற்கொலை செய்துகொள்ள புருசோத்தமும், பத்மஜாவும் முடிவு செய்திருந்ததாகவும், மகள்களுடன் தாங்களும் திரும்பவும் உயிர்பெற்று விடுவோம் என்று நம்பிக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. ஆனால் போலீசார் உடனடியாக அவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டதால் தற்கொலை தடுக்கப்பட்டுவிட்டது. கற்பனைக்கு அப்பாற்பட்ட இந்த கோரச்சம்பவம், ஒட்டுமொத்த ஆந்திராவையே அதிர்ச்சியில் உறையவைத்துவிட்டது.

சாமியார் ஆலோசனை

பத்மஜாவுக்கு வலிப்புநோய் உள்ளதாகவும், அதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், மகள்களை நரபலி கொடுத்தால் தாய்க்கு வலிப்பு சரியாகும் என்று கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு சாமியார் கூறிய ஆலோசனையின் பேரில் அவர்கள் இந்த முட்டாள்தனமான முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

எது எப்படியோ, கண்மூடித்தனமான மூடநம்பிக்கை, வாழவேண்டிய இரு இளம்பெண்களின் உயிரை அநியாயமாகப் பறித்துவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com