கொரோனா பிரச்சினையை பா.ஜனதா தான் அரசியல் ஆக்குகிறது - ஜே.பி.நட்டாவுக்கு காங்கிரஸ் பதிலடி

தனது தவறுகளை மறைக்க கொரோனா பிரச்சினையை பா.ஜனதாதான் அரசியல் ஆக்குவதாக ஜே.பி.நட்டாவுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
கொரோனா பிரச்சினையை பா.ஜனதா தான் அரசியல் ஆக்குகிறது - ஜே.பி.நட்டாவுக்கு காங்கிரஸ் பதிலடி
Published on

புதுடெல்லி,

பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், கொரோனா பிரச்சினையில் காங்கிரஸ் அரசியல் செய்து வருவதாகவும், மக்களை திசைதிருப்பி தேவையற்ற பீதியை உருவாக்கி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்தநிலையில், அவருக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் மூத்த செய்தித்தொடர்பாளர் அஜய் மக்கான் இணையவழியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை. இது அரசியல் பிரச்சினையும் அல்ல. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசுக்கு ஆக்கபூர்வமான யோசனைகளை தெரிவித்தனர்.

காங்கிரஸ் மட்டும் மத்திய அரசின் செயல்பாட்டை விமர்சிக்கவில்லை. லான்செட் போன்ற அறிவியல் பத்திரிகைகளும், இந்திய மருத்துவ சங்கம் போன்ற அமைப்புகளும் இதேபோன்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளன. அவர்களையும் ஜே.பி.நட்டா விமர்சிப்பாரா?

இந்த பிரச்சினையில் பா.ஜனதாதான் அரசியல் செய்கிறது. தனது தவறுகளை மறைக்க எல்லாவற்றையும் அரசியலாக்க முயற்சிக்கிறது.

சோனியாகாந்திக்கு ஜே.பி.நட்டா கடிதம் எழுதிய விதம் வெட்கக்கேடானது. அவரது கடிதத்தில் ஆணவம் மிகுந்துள்ளது. அந்த ஆணவத்தை கைவிட்டு, தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு மக்களுக்கு மோடி அரசு உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

மத்திய அரசை சரியான பாதையில் திருப்ப நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால், யோசனை சொல்லும் எங்களை பா.ஜனதா கேலி செய்கிறது. நாட்டு மக்களை கைவிட்டதற்காக பா.ஜனதா அரசு இன்னும் வருந்தவில்லை. கங்கை ஆற்றில் பிணங்கள் மிதந்தது குறித்து பிரதமரின் பதில் என்ன?

கடந்த 24 மணி நேரத்தில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அப்படியானால், 18 வயதுக்கு மேற்பட்ட 90 கோடி பேருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க 3 ஆண்டுகளும் 8 மாதங்களும் ஆகும். அத்தனை காலம், நாடு ஊரடங்கில்தான் இருக்குமா என்று பிரதமரையும், ஜே.பி.நட்டாவையும் கேட்க விரும்புகிறோம்.

இவ்வாறு அஜய் மக்கான் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com