‘காந்தியின் நினைவுகளை பா.ஜ.க. அழிக்க முயல்கிறது’ - கார்த்தி சிதம்பரம் எம்.பி.

பா.ஜ.க. அரசு ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் எதிரானது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கடந்த 2005-ம் ஆண்டு ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்’ கொண்டுவரப்பட்டது. 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பல குறைபாடுகள் கூறப்பட்டாலும், இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் பல உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு பதிலாக ‘விக்சித் பாரத் ரோஜ்கர்-அஜீவிகா மிஷன் (கிராமின்)’ அதாவது, ஊரக வேலைத்திட்டம் மசோதாவை மத்திய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கு இடையே ‘விபி-ஜி ராம்ஜி’ என்று அழைக்கப்படும் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஏராளமான மக்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்தது. இந்த திட்டத்திற்கு பதிலாக ‘விபி-ஜி ராம்ஜி’ என்ற விசித்திரமான பெயரை உடைய திட்டத்தை அறிமுகப்படுத்தி, பா.ஜ.க. அரசு தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவுகளை அழிக்க முயல்கிறது. இந்த அரசு ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் எதிரானது” என்று தெரிவித்தார்.






