பா.ஜனதா இன்னும் எதிர்க்கட்சி தலைவரையே தேர்ந்தெடுக்கவில்லை

பா.ஜனதா இன்னும் எதிர்க்கட்சி தலைவரையே தேர்ந்தெடுக்கவில்லை என்று தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் விமர்சித்துள்ளார்.
பா.ஜனதா இன்னும் எதிர்க்கட்சி தலைவரையே தேர்ந்தெடுக்கவில்லை
Published on

பெங்களூரு:-

தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உத்தரவாத திட்டங்கள்

பா.ஜனதா இன்னும் எதிர்க்கட்சி தலைவரையே தேர்ந்தெடுக்கவில்லை. முன்பு பா.ஜனதா ஆட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடி விலை நிர்ணயித்தனர். அதே போல் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் கொடுக்க வேண்டிய நிலை இருக்கலாம். முதல்-மந்திரி சித்தராமையா முதல் முறையாக பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

முந்தைய பா.ஜனதா அரசு நிதி ஒழுங்குமுறைகளை மீறி நீர்ப்பாசனம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் திட்டங்களை அமல்படுத்த டெண்டர் அழைத்ததே இதற்கு காரணம் ஆகும். ஆயினும் அரசு கஜானாவை நிரப்ப சித்தராமையா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். 5 உத்தரவாத திட்டங்களுக்கு ரூ.52 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் அதில் ரூ.36 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.

விமான நிலையம்

முந்தைய பா.ஜனதா அரசு பாடத்திட்டத்தை மாற்றுவதாக கூறி பெரிய தவறு செய்தது. அந்த தவறை சரிசெய்து அம்பேத்கர், குவெம்பு, பசவண்ணர் உள்ளிட்ட பெரிய மகான்களின் வரலாறுகள் சேர்க்கப்படும். அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் கூடுதல் 5 கிலோ அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்படுகிறது. நாங்கள் 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துகிறோம். ஆனால் மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி, காங்கிரஸ் அரசு ஏழைகளின் வயிற்றில் அடிப்பதாக சொல்வது சரியல்ல.

விஜயாப்புராவில் விமான நிலையம் அமைக்கும் பணிகளுக்கு தேவைப்படும் ரூ.70 கோடி விரைவில் ஒதுக்கப்படும். நடப்பு ஆண்டிலேயே இந்த விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com