

புதுடெல்லி,
மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவை பயன்படுத்தி ஆட்சி அமைத்துள்ளதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா கூறியதாவது:-
மராட்டியத்தில் முறைகேடான அரசு பதவியேற்ற நாள் இந்திய வரலாற்றின் கருப்பு அத்தியாயமாகி உள்ளது. அரசியல்சாசனத்தை தனது அடிமை கருவியாக கருதும் உள்துறை மந்திரி அமித்ஷாவின் தூண்டுதலால் கவர்னர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். மக்கள் அளித்த தீர்ப்பையும், வெற்றிபெற்ற எம்.எல்.ஏ. க்களின் நம்பிக்கையையும் அமித்ஷா ஏலம்போட்டு விற்றுவிட்டார். பா.ஜனதாவுக்கு இதெல்லாம் வழக்கமானதாக ஆகிவிட்டது.
இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து இரவு முடிந்த உடனேயே ஒரு அரசு பதவி ஏற்றது இதுவே முதல் முறை. அரசியல்சாசனம் களங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி வெட்டித்தள்ளப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பு பா.ஜனதாவும், பட்னாவிசும் ரூ.72 ஆயிரம் கோடி பாசன ஊழலில் அஜித் பவாரை ஜெயிலுக்கு அனுப்புவோம் என்றனர். ஆனால் தேர்தலுக்கு பின்னர் அவரை துணை முதல்-மந்திரியாக மந்திராலயத்துக்கு அனுப்பியுள்ளனர். பா.ஜனதாவும், அஜித் பவாரும் துரியோதனன், சகுனி போல நடந்துகொண்டுள்ளனர். அவர்கள் மராட்டிய மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி கூறும்போது, மராட்டிய செய்தியை நான் படித்தபோது இது பொய் செய்தி என்றுதான் நினைத்தேன். வெளிப்படையாகவும், எனது சொந்த கருத்தாகவும் நான் சொல்வது, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா பேச்சுவார்த்தை 3 நாட்களுக்கு மேல் போயிருக்கக் கூடாது, மிகவும் இழுத்துக்கொண்டே சென்றுவிட்டது. கிடைத்த வாய்ப்பை வேகமாக செயல்பட்டவர்கள் தட்டிச்சென்றுவிட்டனர் என்றார்.
ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் டுவிட்டரில், திடீரென ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக் கொண்டதிலும், புதிய அரசு பதவி ஏற்றதிலும் என்ன அறநெறி உள்ளது. ஜனநாயகத்தை எந்த பாதையில் கொண்டுசெல்கிறார்கள்? இப்படிப்பட்டவர்களால் எப்படி சிறந்த நிர்வாகத்தை தரமுடியும்? மக்கள் பா.ஜனதாவுக்கு உரிய நேரத்தில் தக்க பாடம் கற்பிப்பார்கள் என்று கூறியுள்ளார்.