

சண்டிகார்,
அரியானா மாநிலம் நுஹ் மாவட்டம் பிச்சோர் கிராமத்தை சேர்ந்தவர் சிராஜூ (வயது 30). இவரின் 8 வயது மகன் ஆரிஜ் நேற்று காலை வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது அங்கு சரியாக மூடப்படாமல் இருந்த கழிவு நீர் தொட்டிக்குள் சிறுவன் ஆரிஜ் தவறி விழுந்தான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அவனது தந்தை சிராஜூவும், அவரின் மூத்த சகோதரர் சாலாமுவும் (35) வெளியே ஓடிவந்தனர்.
சிறுவன் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் அவனை காப்பாற்ற கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கினர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர்களும் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர்.
ஆனால் அதற்குள் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த சிறுவன் ஆரிஜ் உள்பட 3 பேரும் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.