

புதுடெல்லி,
திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் புகைப்படக்காரர்கள் மற்றும் வீடியோ படம் எடுப்பவர்கள் பல கோணங்களில் இருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுப்பதுண்டு. ஒரு சிறந்த புகைப்படம் எடுப்பதற்கு சரியான வெளிச்சம் மற்றும் சரியான கோணம் உள்ளிட்டவை மிக அவசியம்.
இதுதவிர, சாலையில் படுத்து கொண்டும், நீருக்குள் சென்றும், மரத்தின் மீது ஏறியும், மலை முகட்டில் நின்று கொண்டும், இயற்கை காட்சிகளையும், செயற்கை நிகழ்வுகளையும் படங்களாக எடுத்து வருபவர்கள் உண்டு.
இதேபோன்று எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சிறுவன் ஒருவன், நடன நிகழ்ச்சியில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொள்ள அதனை வளைந்து, நெளிந்து படம் பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தரையில் உருண்டு, புரண்டு, பக்கவாட்டில் ஊர்ந்து சென்று என பல்வேறு திசைகளில் இருந்தும் அந்த வீடியோவை எடுத்துள்ளான். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நடனம் ஆடுவதிலும், கொண்டாட்டத்தில் ஈடுபடுவதிலும் கவனம் செலுத்துகின்றனர்.
ஆனால் சிறுவனோ, எந்த ஒரு காட்சியையும் விட்டு விட கூடாது என்பதற்காக, வேறு எதனையும் கவனிக்காமல் மொபைல் போனில் வீடியோ எடுப்பதிலேயே முழு கவனமும் செலுத்துகிறான். சுற்றியிருப்பவர்கள் அவனை நோக்கி சிரித்தபோதும் அதனை கண்டு கொள்ளவில்லை.
ஒரு கட்டத்தில் இசைக்கு ஏற்ப சிறுவனும் நடனம் ஆடுகிறான். அப்போதும், வீடியோவை எடுப்பதில் கவனம் குறையவில்லை. எனினும், வீடியோ எடுத்து கொண்டிருக்கும்போதே மற்றொரு சிறுவன் வந்து மொபைல் போனை வாங்கி செல்வதுடன் இந்த வைரலான வீடியோ நிறைவடைகிறது. பார்ப்பவர்களுக்கு நகைச்சுவை ஏற்படுத்த கூடிய இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.