மணிப்பூரில் 2 பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்... 3 ஆண்டுகளாகியும் தண்டனை பெறாத குற்றவாளிகள்

சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ, மணிப்பூர் மக்கள் அனுபவித்த கொடூரங்களின் துயரமான சான்றாக அமைந்தது.
Image Courtesy: ANI
Image Courtesy: ANI
Published on

இம்பால்,

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதி மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அரங்கேற்றிய கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் வீடியோக்களாக வெளியாகி நாட்டையே உலுக்கியது.

அதிலும் குறிப்பாக மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தில் நடந்த கலவரத்தில், குக்கி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, தெருவில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. நாட்டு மக்களை பதைபதைக்க வைத்த இந்த வீடியோ, மணிப்பூர் மக்கள் அனுபவித்த கொடூரங்களின் துயரமான சான்றாக அமைந்தது.

பட்டப்பகலில் இந்த கொடூரம் நடந்தது. அந்த இடத்தில் காவல்துறையினர் உள்பட நூற்றுக்கணக்கானோர் இருந்தனர். ஆனால், அந்த 2 பெண்கள் அனுபவித்த கொடுமையில் இருந்து அவர்களை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. மணிப்பூரில் எந்த அளவிற்கு இனக்கலவரம் அதன் உச்சகட்டத்தை எட்டியிருந்தது என்பது இந்த வீடியோ மூலமாகவே உலகிற்கு தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரது தந்தை மற்றும் தம்பி ஆகிய இருவரும், அந்த பெண்ணின் கண் முன்னாலேயே அடித்து கொலை செய்யப்பட்டனர். கலவரக்காரர்களிடம் இருந்து தனது சகோதரியை காப்பாற்ற அந்த சிறுவன் இறுதிவரை போராடியுள்ளான். ஒரே நாளில் தனது குடும்பத்தையும் இழந்து, பொதுவெளியில் நிர்வாணமாக்கப்பட்டு, நினைத்துப் பார்க்க முடியாத வேதனையை அந்த பெண் அனுபவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணின் கணவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர் ஆவார். சம்பவம் நடந்தபோது அவர் வேறு ஊரில் இருந்துள்ளார். இந்த சம்பவம் 2023-ம் ஆண்டு மே 4-ந்தேதி நடந்தது. ஆனால் அந்த சமயத்தில் இது தொடர்பாக குற்றவாளிகள் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே ஆண்டு ஜூலை 19-ந்தேதி, இது தொடர்பான வீடியோ வைரலாக பரவிய பிறகே, போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு நேரடியாக தலையிட்டு வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து 2023-ம் ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி, இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதோடு, வழக்கு விசாரணை கவுகாத்திக்கு மாற்றப்பட்டது.

இதனிடையே, கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி, குற்றவாளிகள் கிரன் மெய்தி மற்றும் அருண் கங்தோங்பம் ஆகிய 2 பேருக்கு கவுகாத்தி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. வழக்கில் கைதான மற்றொரு குற்றவாளி ஜிபான் சிங், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கவுகாத்தி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு வரும் 24-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரான முன்னாள் ராணுவ வீரர் கூறுகையில், “இந்த சம்பவத்தில் லோயா என்ற முக்கிய குற்றவாளிக்கு தொடர்பு உள்ளது. அவர் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார் என்று உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்னிடம் கூறினர். அவரை கைது செய்ய போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பல குற்றவாளிகள் போலீசாரால் கைது செய்யப்படவே இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், சம்பவம் நடந்தபோது அங்கு காவலர்கள் இருந்துள்ளனர் என்றும், பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களிடம் உதவி கேட்டபோதும் அவர்கள் உதவி செய்யவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. தங்கள் காரில் சாவி இல்லை என்று கூறி, கலவரக்காரர்களிடம் அந்த 2 பெண்களையும் போலீசார் விட்டுவிட்டனர் என்று சி.பி.ஐ. கூறியுள்ளது. இந்த வழக்கில் போலீசாரின் பங்கு குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து 3 ஆண்டுகள் ஆகியும், பாதிக்கப்பட்ட 2 பெண்களும் தங்களால் இன்னும் அதில் இருந்து மீண்டு வர முடியவில்லை என்று கூறியுள்ளனர். அவர்கள் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டதாகவும், வீட்டை விட்டு வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்த்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த 2 பெண்களுக்கும் அரசு சார்பில் மனநல ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை எந்த குற்றவாளியும் தண்டனை பெறாத நிலையில், பாதிக்கப்பட்ட 2 பெண்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்காத வேதனையை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com