

துமகூரு [கர்நாடகா],
தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பீடி தகராறில் அவர் தொழிலாளியை தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி டவுன் பஜார் சாலையில் கடந்த 14-ந்தேதி தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிக்கநாயக்கனஹள்ளி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் கொலையானவர் சிவராஜ் என்பதும், கூலி தொழிலாளியான அவர் அந்தப்பகுதியில் சிறு சிறு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். கடந்த 13-ந்தேதி இரவு யாரோ மர்மநபர்கள் அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிக்கநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்தப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வந்தனர். ஆனால் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவம் நடந்த நாளில் ஒரு கண்காணிப்பு கேமராவில் மர்மநபர் ஒருவரின் உருவம் பதிவாகி இருந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில், சிவராஜை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் சிக்கநாயக்கனஹள்ளி பனசங்கரி பகுதியை சேர்ந்த தாதாபீர் (வயது 24) என்பது தெரியவந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த 13-ந்தேதி இரவில் சிவராஜும், தாதாபீரும் தனித்தனியாக மது குடித்துள்ளனர். சிவராஜ் பஜார் சாலையில் உள்ள கடைக்கு அருகில் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற தாதாபீரிடம் சிவராஜ் பீடி கேட்டுள்ளார். தாதாபீரும் பீடியை கொடுத்துள்ளார். போதையில் இருந்த அவர்களுக்குள் திடீரென பீடி விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது சிவராஜ், தாதாபீரின் தாயை பற்றி அவதூறாக திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தாதாபீர், சிவராஜை கீழே தள்ளிவிட்டு தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைதான தாதாபீரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.