அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது

தமிழக சட்டசபையில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது
Published on

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் நாங்குநேரி, விக்கிர வாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எச்.வசந்தகுமார், நாடாளுமன்ற தேர்தலில் கன்னியா குமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானதால், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இதேபோல், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராதாமணி உடல்நல குறைவால் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மரணம் அடைந்தார்.

இதனால் இந்த இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

தற்போதைய நிலையில், தமிழக சட்டசபையில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. கூட்டணியின் பலம் 123 ஆகவும், தி.மு.க. கூட்டணியின் பலம் 108 ஆகவும் உள்ளது. சுயேச்சை எம்.எல்.ஏ.வாக டி.டி.வி.தினகரன் உள்ளார்.

இந்த நிலையில், காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா நேற்று அறிவித்தார்.

இடைத்தேர்தல் அட்டவணையையும் அப்போது அவர் வெளியிட்டார்.

அதன்படி, வேட்புமனு தாக்கல் 23-ந் தேதி (நாளை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 30-ந் தேதி (திங்கட்கிழமை) ஆகும்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் அக்டோபர் 3-ந் தேதி (வியாழக்கிழமை). ஓட்டுப்பதிவு அக்டோபர் 21-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும்.

பதிவான வாக்குகள் 24-ந் தேதி (வியாழக்கிழமை) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குவதால், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளன.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. நாங்குநேரி, விக்கிர வாண்டி ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அதற்கான விருப்ப மனுக்கள் அக்கட்சி அலுவலகத்தில் இன்றும், நாளையும் பெறப் படுகின்றன.

எதிர்க்கட்சியான தி.மு.க. விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. நாங்குநேரி தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து நாளை (திங்கட் கிழமை) விருப்ப மனு பெறப்படுகிறது. வருகிற 24-ந் தேதி தி.மு.க. நேர்காணல் நடத்தி வேட்பாளரை அறிவிக்க இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இடைத்தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com