

மும்பை,
மும்பையை சேர்ந்த ரபேல் சாமுவேல் (வயது 27) போலி தாடி, மீசை மற்றும் கண்ணாடி அணிந்துகொண்டு யூ-டியூப்பில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதில், இந்த உலகில் பிறக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் சக்தி குழந்தைகளுக்கு இல்லை. எனவே குழந்தைகளின் வாழ்க்கைக்கு பெற்றோர் தான் உதவ வேண்டும். நாம் இந்த உலகில் நமது சம்மதம் இல்லாமலேயே கொண்டு வரப்பட்டு உள்ளோம். என் சம்மதம் இல்லாமல் என்னை பெற்றெடுத்த தாய்-தந்தைக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன் என கூறியுள்ளார்.
மேலும் முகநூல் பதிவில், தங்களது சுகத்துக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் என்னை பெற்றெடுத்து இருக்கிறார்கள். இதனால் நான் ஏன் உழைத்து சம்பாதிக்க வேண்டும்? என்று பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து ரபேல் சாமுவேலின் தாய் கவிதா கர்னட் தனது முகநூல் பதிவில், என் மகனின் சம்மதத்தை பெற்று அவரை எப்படி பெற முடியும் என்பதை தெளிவாக கூறினால், நான் எனது தவறை ஒப்புக்கொள்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.