காவிரி விவகாரம் 14-ந் தேதி வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தரவு: கர்நாடக தேர்தலுக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

காவிரி விவகாரத்தில் கர்நாடக தேர்தலுக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடை பெறும். 14-ந் தேதி வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
காவிரி விவகாரம் 14-ந் தேதி வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தரவு: கர்நாடக தேர்தலுக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
Published on

புதுடெல்லி,

காவிரி வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவிரி தீர்ப்பை அமல்படுத்துவதற்கான வரைவு செயல்திட்டத்தை உடனடியாக தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்; ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்கு 4 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலம் சார்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாட்டுக்கு போதுமான தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. எங்கள் மாநிலத்தில் உள்ள 4 அணைகளிலும் உள்ள நீர், பெங்களூரு உள்ளிட்ட நகர்ப்புறம் மற்றும் இதர கிராமப்புறங்களின் குடிநீர் தேவைக்குத்தான் போதுமானதாக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் சார்பில், வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், காவிரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு சார்பில், அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆஜராகி வாதாடினார். அவர், வரைவு செயல்திட்டம் தயாராக உள்ளது. பிரதமரும், மற்ற மந்திரிகளும் கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இருப்பதால் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெறவில்லை. எனவே, மத்திய மந்திரிசபை கூட்டத்தில் வரைவு செயல்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று, கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு 10 நாட்கள் மேலும் அவகாசம் தேவை என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அவர், வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதுவரை அவர்கள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் நாங்கள் மத்திய அரசை நம்ப மாட்டோம். எங்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. எங்களுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை. என்று கூறினார்.

அத்துடன், கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டுதான் இப்படி செயல்படுகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிகிறது. நம்பிக்கை வைத்த எங்களை தொடர்ந்து வஞ்சிக்கும் வேலையை மட்டும்தான் மத்திய அரசு செய்து இருக்கிறது. கர்நாடக தேர்தலை மனதில் கொண்டுதான் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த தாமதப்படுத்துகிறது என்று கூறி வந்தோம். விசாரணையை தற்போது 14-ந் தேதிக்கு ஒத்திவைக்க அவர்கள் கோருவதில் இருந்து அது உறுதியாகி இருக்கிறது. கோர்ட்டு உத்தரவுக்கும் பயப்படாமல் தன்னிச்சைப்படி நடந்து கொள்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

இதற்கு அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சென்ற முறை நடைபெற்ற விசாரணையின் போது கர்நாடகம் ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று ஆரம்பித்தபோது சேகர் நாப்டே குறுக்கிட்டார்.

அவர், நாங்கள் தண்ணீர் திறந்து விடுவது குறித்த பிரச்சினைக்குள் போக விரும்பவில்லை. எங்களுக்கு வேண்டியது நிரந்தரத் தீர்வு. சரியான அமைப்பு ஒன்றை மத்திய அரசு உருவாக்கி விட்டால் தண்ணீர் பங்கீடு பற்றி அந்த அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்ளும். அந்த அமைப்பின் மேற்பார்வையில் எங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அளவு நீர் கிடைக்க வழி கிடைக்கும். ஆனால் அதற்கான வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு வேண்டும் என்றே தாமதப்படுத்தி வருகிறது என்று கூறினார்.

இதற்கு அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், செயல்திட்டம் அமைப்பது தொடர்பாக கூட்டத்துக்கு அழைத்தபோது தமிழக அரசு அந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். அப்போது அவர்கள் எந்த விஷயம் குறித்தும் எதிர்ப்பு எதுவும் காட்டவில்லை. செயல்திட்டம் தொடர்பாக அவர்கள் மனு ஒன்றையும் மத்திய அரசுக்கு அளித்தார்கள். இது தொடர்பாக முடிவை எடுப்பதற்கு முன்பு சட்டம்- ஒழுங்கு நிலைமையையும் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது என்று கூறியதுடன், கடந்த காலத்தில் காவிரி பிரச்சினையில் இரு மாநிலங்களிலும் வன்முறை போராட்டங்கள் நடந்ததாக சுட்டிக்காட்டினார். எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையையும் குறிப்பிட்டார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சேகர் நாப்டே, பூனை, வெளியில் வந்துவிட்டது. மத்திய அரசின் உள்நோக்கம் தெளிவாகிவிட்டது. எங்களுக்கு தண்ணீர் கிடைக்காது என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், கோர்ட்டு தீர்ப்பை வழங்கினால் அதனை நிறைவேற்றியே தீர வேண்டும். மீண்டும் தொடங்கிய இடத்துக்கே செல்ல முடியாது. சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் முக்கியத்துவத்தை மத்திய அரசு உணர வேண்டும். மேலும் காலதாமதம் செய்தால் அது கோர்ட்டு அவமதிப்பாக கருதப்படும். எனவே, மத்திய நீர்வளத்துறை செயலாளர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி, வரைவு செயல்திட்டத்தை 14-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும். அதுவரையில் வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்று உத்தரவு பிறப்பித்தனர்.

கர்நாடக சட்டசபை தேர்தல் 12-ந் தேதி நடக்கிறது. எனவே அந்த தேர்தல் முடிந்த பின்னர்தான் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com