காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு பணிகளில் தாமதம்

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு பணிகளில் காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு பணிகளில் தாமதம்
Published on

புதுடெல்லி,

காவிரி விவகாரம் நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பிறகு கடந்த 18-ந்தேதி முடிவுக்கு வந்தது. அன்றைய தீர்ப்பில், தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கிற காரணத்தால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே காவிரி வரைவு செயல் திட்டத்தை உடனடியாக அரசிதழில் வெளியிட்டு, காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கு, மத்திய அரசு மந்திரிசபையை கூட்டி அதன் ஒப்புதலை பெற்று, அரசிதழில் வெளியிட வேண்டும். அதன்பிறகு தான் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க முடியும். மத்திய மந்திரிசபை நாளை (புதன்கிழமை) நடைபெற வேண்டும். ஆனால் பிரதமர் மோடி 3 நாடுகள் (மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர்) சுற்றுப்பயண திட்டத்தின்படி வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். ஜூன் 2-ந்தேதி தான் திரும்பி வருகிறார். இதனால் அதுவரை மந்திரிசபை கூடுவதற்கு வாய்ப்பில்லை.

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை என்றாலும், தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளது. அதன்படி பார்த்தால் தென்மேற்கு பருவமழை தொடங்கியும், வரைவு செயல்திட்டம் அரசிதழில் வெளியிடப்படாமல் உள்ளது.

இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் கூறுகையில், காவிரி வரைவு செயல்திட்டத்துக்கு மந்திரிசபையின் ஒப்புதல் இதுவரை பெறப்படவில்லை. பிரதமர் ஊரில் இல்லாததால் வேறுவழிகளை ஆராய்கிறோம் என்றார். இதற்கிடையே, ஜூன் 1-ந்தேதிக்குள் வரைவு செயல்திட்டம் மத்திய அரசிதழில் வெளியிடப்படவில்லை என்றால் மத்திய நீர்வளத்துறை செயலாளருக்கு கடிதம் எழுத தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com