

புதுடெல்லி,
மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது. மேலும் புதிய இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது.
சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன.
இந்தநிலையில் இது குறித்து காங். தலைவர் ராகுல் காந்தி செய்தியார்களிடம் கூறீயதாவது:
சிபிஐ இயக்குனர் நியமனம் மற்றும் நீக்கம் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூவர் குழுவால் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை. ஆனால் சிபிஐ இயக்குனர் நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
இது சிபிஐ அதிகாரிகளை நீக்கம் செய்தது நாட்டு மக்களை அவமதிக்கும் செயல். ரபேல் விவகாரத்தை நீர்த்துப்போகவே முயற்சி நடந்துள்ளது. ஆதாரத்தை அழிக்க அரசு முயல்கிறது. பிரதமர் பீதியில் காணப்படுகிறார். அவர் ஊழலில் ஈடுப்பட்டு பிடிபட்டுவிட்டோம் என்று பயப்படுகிறார். மக்களின் வரிப்பணம் அனில் அம்பானிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.