நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உண்டு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உண்டு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர்.

குறிப்பாக வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாகவும், நீதிபதிகள் அமர்வை அமைப்பதில் சுய விருப்பப்படி நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டினர். இது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், அசோக் பாண்டே என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல வழக்கைத் தொடர்ந்தார். அதில், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளில் வழக்குகளை விசாரிப்பதற்கான அமர்வுகளை அமைப்பதில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் விதமாக விதிமுறைகளை வகுக்கவேண்டும். இது தொடர்பாக மூத்த நீதிபதிகளின் அறிவுரையையும் பெறவேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த அமர்வு சார்பாக தீர்ப்பை எழுதிய நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பொது நல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனைவரும் சம அந்தஸ்து கொண்டவர்கள் ஆவர். அதே நேரம், அவர்களுக்குள் முதன்மையானவர் தலைமை நீதிபதிதான். நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வதற்கும், வெவ்வேறு அமர்வுகளை அமைக்க உத்தரவிடுவதற்கும் அவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

நீதித்துறையின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் தலைமை நீதிபதிதான். சுப்ரீம் கோர்ட்டு சுமுகமாக நடைபெறுவதற்கும், வழக்குகள் உரிய நேரத்தில் விசாரிக்கப்படுவதற்கும் தலைமை நீதிபதிக்கு உரிமை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே இதற்காக வழிமுறைகளை வகுக்க முடியாது. தலைமை நீதிபதி மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதையும் ஏற்க இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com