தாயின் தூக்கத்தால் சாலையில் தவறி விழுந்த குழந்தை: பெற்றோர் மீது வழக்கு - கேரள போலீஸ் அதிரடி

தாயின் தூக்கத்தால் குழந்தை சாலையில் தவறி விழுந்த சம்பவத்தில், அலட்சியமாக இருந்த பெற்றோர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தாயின் தூக்கத்தால் சாலையில் தவறி விழுந்த குழந்தை: பெற்றோர் மீது வழக்கு - கேரள போலீஸ் அதிரடி
Published on

மூணாறு,

ஜீப்பில் சென்றபோது, அயர்ந்து தூங்கியதால் தாயின் மடியில் இருந்த குழந்தை தவறி சாலையில் விழுந்தது. வனத்துறையினர் குழந்தையை மீட்டனர். இதனையடுத்து அலட்சியமாக இருந்த பெற்றோர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் சபீஷ். இவர் தனது மனைவி சத்யபாமாவுடன் ஜீப்பில் பழனிக்கு வந்து, தனது ஒரு வயது குழந்தைக்கு மொட்டை போட்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் ஜீப்பில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

ஜீப்பின் ஓரத்தில் அமர்ந்திருந்த சத்யபாமா, தனது குழந்தையை மடியில் வைத்திருந்தார். இரவு நேரம் என்பதால் சத்யபாமா அயர்ந்து தூங்கி விட்டார். மூணாறு அருகே இரவிக்குளம் 5-ம் மைல் பகுதியில் சென்றபோது, சத்யபாமாவின் மடியில் இருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக சாலையில் தவறி விழுந்தது.

45 கி.மீ. தூரம் சென்ற பின்னர் தான் குழந்தை தவறி விழுந்தது தம்பதிக்கு தெரியவந்தது. குழந்தை விழுந்த இடம் வனவிலங்குகள் நடமாடும் பகுதியாகும். அந்த பகுதியில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணித்து வந்தனர்.

அப்போது சாலையில் குழந்தை ஒன்று தவழ்ந்து வருவதை கேமராவில் கண்டதும் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே வனத்துறையினர் குழந்தையை மீட்டு, போலீசார் மூலமாக தம்பதியிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே குழந்தையை பாதுகாப்பதில் அலட்சியமாக இருந்ததாக தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com