சர்வாதிகாரத்தின் முடிவு தொடங்கிவிட்டது - அபிஜீத் திப்கே

பிரதமராக மோடி இந்தியாவுக்கு அவமானமாகத் திகழ்கிறார் என அபிஜீத் திப்கே கூறியுள்ளார்.
அபிஜீத் திப்கே
Published on: 

புதுடெல்லி,

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டி தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மும்பையில் போராட்டம்

இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று மும்பையில் அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஏற்கனவே தங்களது போராட்டத்தால் மத்திய கல்வி மந்திரியை பதவி விலக வைத்த செயல், அவர்களை இந்த போராட்டத்துக்கு மேலும் ஊக்கப்படுத்தியது.

இதனால் 10-ந்தேதி (அதாவது நேற்று) டெல்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடை பெறும் என அறிவித்து இருந்தனர். போராட்டத்தை முறியடிப்பதற்காக போலீசார் டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தனர். முதலாவதாக கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அடுத்ததாக போராட்டத்துக்கு வருகிறவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டன. தொலைதூர ஊர்களில் இருந்து டெல்லிக்கு வரவேண்டிய பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பிற்பகல் 2 மணி வரை ரத்து செய்யப்பட்டன. டெல்லியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.

அபிஜீத் திப்கே கைது

இதற்கிடையே மும்பையில் இருந்து இந்த போராட்டத்துக்காக புறப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, பிற நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லி விமான நிலையத்துக்கு நேற்று காலை 10:30 மணி அளவில் வந்தனர். இதனை முன்கூட்டியே அறிந்திருந்த போலீசார் அந்த விமானத்துக்குள்ளேயே ஏறி அவர்களை கைது செய்தனர்.

அப்போது அவர்கள் 3 பேரும் முரண்டு பிடித்தனர். "எங்களை நீங்கள் கைது செய்யத்தான் போகிறீர்கள் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்" என்றனர். இருந்தாலும் எங்களை கீழே இறங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டனர். ஆனால் போலீசார் அவர்களை விட வில்லை. அவர்களை கைது செய்து விமான நிலையத்துக்கு வெளியே கொண்டு வராமல் பின்பக்க வழியாக அழைத்துச் சென்று 3 பேரையும் தனித்தனி இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையே போராட்டக்காரர்கள் பல இடங்களிலும் கும்பல் கும்பலாக கைது செய்யப்பட்டு கொண்டே இருந்தனர். தொடக்கத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சட்டக்குழுத்தலைவர் ரத்னா சிங், யூடியூப் செயல்பாட்டாளர் துருவ் ரத்தீ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருந்தனர். மொத்தமாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது ஆனார்கள். இந்த தொடர் கைது நடவ டிக்கைகளால் டெல்லி மிகுந்த பரபரப்பாக இருந்தது.

நிபந்தனையில் அடிப்படையில் விடுவிப்பு

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிககள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்ற எந்தத் தகவலும் காவல்துறை தரப்பிலிருந்து அளிக்கப்படவில்லை. எனவே, சிஜேபி நிர்வாகிகள் கடத்தப்பட்டதாக சிஜேபி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், டெல்லியின் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் சிஜேபி தலைவர்களான அபிஜீத் தீப்கே, அசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் நீதிபதி முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 3 பேரை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். ஓராண்டு காலம் அமைதிக்கு இடையூறு செய்யக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து சர்வதிகாரத்தின் முடிவு தொடங்கிவிட்டது என அபிஜீத் திப்கே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில்,

சிஜேபி அமைப்பு ஒருபோதும் பின்வாங்காது

மோடி பிரதமராக இருப்பது இந்தியாவுக்கு அவமானம். நாட்டில் இதுவரை இவ்வளவு பெரிய கோழையையும், அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டுபவரையும் பார்த்ததில்லை. “இந்தத் துயரமான நேரத்தில் எனது குடும்பத்தினருடன் இருக்க எனது சொந்த கிராமத்துக்குத் திரும்பிச் செல்கிறேன். டெல்லியில் சவுரவ் மற்றும் ஆஷு ஆகியோர் விரைவில் செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள்.

சிஜேபி அமைப்பு ஒருபோதும் பின்வாங்காது. மிரட்டல்களுக்கும் அஞ்சாது. அக்டோபர் 10-ம் தேதி, இந்தச் சர்வாதிகாரத்தின் முடிவுக்கான தொடக்கமாக வரலாற்றில் இடம்பெறும் என அதில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com