முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற கருத்து ஒற்றுமை ஏற்படுத்தப்படும் மத்திய மந்திரி அனந்தகுமார் பேட்டி

பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கும் நிலையில், முத்தலாக் மசோதாவை நிறைவேற்றுவதில் அனைத்துக் கட்சிகளுக்கு இடையே கருத்து ஒற்றுமை ஏற்படுத்தப்படும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார் கூறினார்.
முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற கருத்து ஒற்றுமை ஏற்படுத்தப்படும் மத்திய மந்திரி அனந்தகுமார் பேட்டி
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதில் வருகிற 1-ந்தேதி (வியாழக்கிழமை) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் தொடங்கும் இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் முத்தலாக் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் உள்ளது. எனவே இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்துக்கட்சிகளுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்ட மத்திய மந்திரிகளும், அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்துக்கட்சியினரை கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டம் இனிமையாக இருந்ததாக பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முத்தலாக் மசோதா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக அனைத்துக் கட்சியினரிடையே கருத்து ஒற்றுமை ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com