அசாம் சட்டசபை தேர்தல்; காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

அசாம் சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி நாளை வெளியிடுகிறார்.
அசாம் சட்டசபை தேர்தல்; காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு
Published on

கவுகாத்தி,

126 உறுப்பினர்களுக்கான அசாம் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன்படி, வருகிற 27ந்தேதி 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெறும்.

இதனையடுத்து ஏப்ரல் 1ந்தேதி 13 மாவட்டங்களில் உள்ள 39 தொகுதிகளுக்கு 2வது கட்ட தேர்தல் நடைபெறும். தொடர்ந்து ஏப்ரல் 6ந்தேதி 12 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கு 3வது கட்ட தேர்தல் நடைபெறும்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி அசாமில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ராகுல் காந்தி திப்ரூகார் நகரில் பொதுகூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு தொண்டர்களிடையே இன்று பேசினார்.

அசாம் மக்களுக்கு 5 உத்தரவாதங்களை வழங்கினார். அவர் பேசும்பொழுது, தேயிலை தொழிலாளர்களுக்கு ரூ.351 வழங்கப்படும் என பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது. ஆனால், ரூ.167 வழங்கப்படுகிறது.

நான் நரேந்திர மோடி இல்லை. நான் பொய் பேசுவது இல்லை. உங்களுக்கு இன்று நாங்கள் 5 உத்தரவாதங்களை அளிக்கிறோம். இதன்படி, தேயிலை தொழிலாளர்களுக்கு ரூ.365 வழங்கப்படும்.

நாங்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நிற்போம். 5 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவோம். 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ரூ.2 ஆயிரம் உள்ளிட்டவற்றை வழங்குவோம் என கூறியுள்ளார்.

தேயிலை தொழிற்சாலைக்காக, நாங்கள் சிறப்பு அமைச்சகம் ஒன்றை உருவாக்குவோம். அதன்பின் உங்களுடைய அனைத்து விவகாரங்களும் தீர்க்கப்படும். இதற்கான தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. தேயிலை பணியாளர்களான பழங்குடியினர் மற்றும் மக்களிடம் நாங்கள் இதுபற்றி ஆலோசனை நடத்தி வருகிறோம். மூடிய கதவுகளுக்கு பின்னால் அல்ல என அவர் கூறினார்.

இதுபற்றி அக்கட்சியின் அசாம் சட்டசபை தேர்தலுக்கான ஊடக பொறுப்பு நிர்வாகி கவுரவ் வல்லப் கூறும்பொழுது, அசாம் மக்களுக்கு 5 உத்தரவாதங்களை நாங்கள் வழங்கி இருக்கிறோம்.

எங்களுடைய தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை அவை கொண்டுள்ளன. அவற்றை கூட்டணி கட்சியினரும் ஏற்று கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி நாளை வெளியிடுகிறார் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com